அரசியல் சார்ந்த பத்திரிக்கைகளும், தினசரி பத்திரிக்கைகளும், வியாபார நோக்கோடு ஆதாரமில்லாத செய்திகளையும், சில வேளைகளில் ஆதாரப்பூர்வமான செய்திகளையும் போடுவது வழக்கம். அதேபோல் இன்று கிறிஸ்தவ உலகில் சிலர் ஊழியர்களின் தவறான வாழ்கை, மற்றும் போதனைகளை சமூக வளைதளங்களில் பதிவிடுகின்றனர். அது தேவையான ஒன்றே, தேவை இல்லை என்று சொல்லுவது சரியான கிறிஸ்தவ நிலைப்பாடு அல்ல.
ஆனால் அதே வேளையில் இப்படிப்பட்ட செயல்களுக்கு சரியான கிறிஸ்தவ அணுகுமுறை என்னவென்பதை தெளிவுபடுத்துவதே, இந்தக் கட்டுரையின் நோக்கம். யாக்கோபு 1:19 கேட்கிறதற்கு தீவிரமாயும், பேசுகிறதற்கு பொறுமையாயும், இருக்கவேண்டுமென்று கூறுகிறது. பேசுவதில் பொறுமை என்பது; நமது காதுகளுக்கு அல்லது கைகளுக்கு கிடைத்த செய்தியை அவசரமாக எழுதிவிடாமல், அதன் நம்பத்தன்மை, அதினால் சம்பத்தப்பட்டவரை நம்பியிருக்கும் அல்லது சுற்றியிருப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு, சபை மற்றும் பிற ஊழியங்களுக்கு ஏற்படும் ஆபத்து இவைகள் என்னவென்பதை ஆராய்ந்து, பரிசுத்த ஆவியானவர் தரும் ஆலோசனைகளின் பிரகாரம் எழுதவேண்டும் அல்லது பேசவேண்டும். இதை செய்யும் தவறும் பட்சத்தில் நமது எழுத்துக்களும் பேச்சுக்களும் தேவ ஊழியத்தையும், சபையையும் சீர்குலைக்கும் ஆயுதங்களாகவும், சுயநீதி சார்ந்ததாகவுமே, இருக்கும்.
இரண்டாவது, பவுல் கலாத்தியருக்கு எழுதும் போது இவ்விதம் கூறுகிறார்; யாதொருவன் குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள், நீயும் சோதிக்கப்படாதபடி எச்சரிக்கையாயிரு கலாத்தியர் 6 :1. குற்றத்தில் அகப்பட்டவர்களின் குற்றங்களை கண்டிப்பதும், சுட்டிக்காட்டுவதும், அப்படிப்பட்டவர்களை சீர்பொருந்தப்பன்னுவதாக இருக்க வேண்டும், ஊழியங்களையும், சபைகளையும் சீர்குலைப்பதாக இருக்ககூடாது. சீர்பொருந்தப்பண்ணாமல் சீர்குலைப்பதாக இருக்குமெனில் அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இராமல், சுயநீதி சார்ந்த பிசாசின் கிரியையாகவே இருக்கும்.
மூன்றாவது, உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது (1கொரிந்தியர் 16:14), மனதில் அடிப்படை கிறிஸ்தவ அன்பு, ஆவிக்குரிய தாழ்மை இல்லாமல் பிறர் செய்யும் குற்றங்களை மட்டும் கண்மூடித்தனமாக எழுதுபவர்கள் அல்லது சொல்லுபவர்களை சுயநீதிக்காரர்கள் என்று சொல்லாமல் என்னவென்று சொல்லுவது? அன்பில்லையெனில் நான் ஒன்றுமில்லை என்று பவுல் சொன்னது போன்று அன்பில்லாமலும் , குற்றம் செய்பவர்கள் மனம்திரும்பவேண்டு, என்கிற கிறிஸ்தவ என்கிற கரிசனையும், அவர்களின் ஆத்தும இரட்சிப்பைக் குறித்த எந்த அக்கறையும், இல்லாமல் செய்யப்படும் எந்தக்காரியமும் சுயநீதி சார்ந்ததே என்பதில் சந்தேகம் இல்லை.
கடைசியாக ஊழியத்தில் இருக்கும் யாவரும், விபசாரக்காரர்கள், காணிக்கைகாக சபை ஆரம்பித்தவர்கள், மாய்மாலக்காரர்கள் என்று சொல்லும் சுயநீதிக்காரர்கள், தங்களின் சொகுசான வாழ்க்கை, லட்சக்கணக்கில் வருமானம் தரும் வேலை இவைகளை வேண்டாம் என்று உதறிவிட்டு, தங்கள் மனைவி பிள்ளைகளோடு சேரிகளிலும், கிராமங்களிலும், ஆதிவாசி மக்கள் மத்தியிலும் விசுவாச ஊழியம் செய்ய முன் வருவார்களா? தவறுகளை சுட்டிகாட்டுங்கள் ஆவியானவரின் வழிநடத்துதலோடு, குற்றத்தில் அகப்பட்டவனை கண்டியுங்கள் அவன் அழிந்தே போய்விடவேண்டுமென்கிற கொலைப்பாதக எண்ணத்தோடு அல்ல சீர்பொருந்த வேண்டுமென்கிற கிறிஸ்துவின் சிந்தையோடு. ஊழியர்கள் யாவரும் கெட்டவர்கள் ஓநாய்கள் என்று சொல்லுவீர்கலெனில், உங்கள் சொகுசான வாழ்க்கை, வேலை, தொழில் இவைகளை விட்டு விட்டு, முழு நேரமாக எப்படி உண்மையாக ஊழியம் செய்ய வேண்டுமென்பதை உங்கள் வாழ்கையின் மூலம் செய்து காட்டுங்கள் மற்றவர்கள் உங்களைப் பார்த்து கற்றுகொள்ளட்டும்.