2 ராஜாக்கள் 18 வது அதிகாரம் 28 வது வசனத்திலிருந்து 19 வது அதிகாரம் 7 ம் வசனம் (2 இராஜாக்கள் 18:28-19:7) வரையுள்ள சம்பவத்தை அடிப்படையாக கொண்டு “ஆபத்தில் ஆலயத்தை நாடின எசேக்கியா” என்கிற தலைப்பில் தியானிக்கலாம்.
எசேக்கியா யூதா நாட்டின் ராஜாவாக இருந்த நாட்களில் அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதா நாட்டை சுற்றியிருந்த பல நாடுகளை போரில் வென்று பின்பு யூதா நாட்டிற்கு வந்து தனது படை பலத்தை காட்டி யூதா நாட்டின் வளங்களை கொள்ளையிட்டான். பின்னர் யூதாவிற்கு விரோதமாக போரிட்டு அதை வெல்லும்படியாகவும், அங்குள்ள மக்களை அடிமைப்படுத்தும் விதமாகவும், தன்னுடைய படை தளபதிகளில் சிலரை பெரும் படையோடு அனுப்பினான்.
சரியான நேரத்திற்காக காத்திருந்த சனகெரிப்பின் தளபதிகளில் ஒருவனான ரப்சாக்கே என்பவன் யூதாவின் தேவனாகிய கர்த்தரை ஏளனம் செய்ததோடு அவரை நம்பும் எசேக்கியா மற்றும் யூதாவின் மக்களை ஏளனம் செய்தான். மற்ற நாட்டின் தெய்வங்களெல்லாம் அவர்களை விடுவிக்கவில்லை. உங்கள் தேவன் மாத்திரம் உங்களை விடுவிப்பாரா என்றும் அவரை நம்புவது வீண் என்றும் பரியாசம் செய்தான். இதை கேட்ட எசேக்கியாவோ தேவனை நாடி தேவாலயம் நோக்கி சென்றான். தேவனாகிய கர்த்தரிடம் முறையிட்டான்.
தேவனாகிய கர்த்தர் எசேக்கியாவின் விண்ணப்பத்தை கேட்டு அவனுக்கு பதிலளித்தார். தன்னை நம்பிய எசேக்கியா மற்றும் யூதா மக்களை பாதுகாத்ததோடு தன்னை இழிவாக பேசிய சனகெரிப் ராஜாவைவும் தண்டித்தார். ஆபத்தான சூழலில் எசேக்கியா நம்முடைய தேவனாகிய கர்த்தரை நம்பினதற்கான காரணம், அவர் எப்படிப்பட்டவர் என்பதை எசேக்கியா அறிந்திருந்ததுதான்.
நம்முடைய தேவனாகிய கர்த்தர் உயிருள்ளவர்
தேவனாகிய கர்த்தர் உயிருள்ள உண்மை தெய்வம் என்பதை எசேக்கியா ராஜா அறிந்திருந்தான். ஆனால் சனகெரிப்போ அறியவில்லை. மற்ற நாடுகளின் தெய்வங்கள் போல யூதா நாட்டு மக்களின் தெய்வமும் மனிதர்களால் உருவக்கப்பட்டது என்று சனகெரிப் நினைத்தான். எனவே தேவனாகிய கர்த்தரை இழிவாக பேசினான். ஆனால் எசேக்கியாவுக்கோ, தேவனாகிய கர்த்தர், கல்லிலோ, மண்ணிலோ அல்லது மரத்திலோ மனிதன் உண்டாக்கிய தெய்வம் அல்ல. மாறாக மனிதரை உண்டாக்கிய உண்மையான உயிருள்ள தெய்வம் என்பதை அறிந்திருந்தான். எனவே உயிருள்ள தேவனாகிய கர்த்தரை அவருடைய ஆலயத்தில் தன்னுடைய ஆபத்தில் நோக்கி பார்த்தான்.
நம்முடைய தேவனாகிய கர்த்தர் உண்மையுள்ளவர்
தேவனாகிய கர்த்தர் உண்மையுள்ளவர் என்பதை எசேக்கியா ராஜா அறிந்திருந்தான். மனிதரால் உண்டாக்கப்பட்ட பல்வேறு தெய்வங்கள் மனிதருக்கு உதவிசெய்ய முடியாதவைகள். இல்லாத ஒன்று எப்படி உதவி செய்யும்? அதுபோக அவைகளுக்கு பணமோ, பொருளோ அல்லது பலிகளோ கொடுத்தால் மட்டுமே ஒருவேளை மனமிரங்கி தன்னை தேடிவருபவர்களுக்கு உதவி செய்யும் என்பதாக மனிதர்கள் நம்புகிறார்கள். ஆனால் உயிருள்ள உண்மை தேவனாகிய கர்த்தரோ ஆபத்திலே தன்னை நோக்கி கூப்பிடும் எவரையும் புறக்கணிக்காத உண்மை தெய்வம் என்பதை எசேக்கியா அறிந்திருந்தான். என்வே தன்னை நம்பி தன்னை நோக்கி பார்த்தபோது தேவனாகிய கர்த்தர் தீர்க்கதரிசி மூலம் எசேக்கியாவிடம் பேசினார்.
நம்முடைய தேவனாகிய கர்த்தர் உதவிசெய்கிறவர்
தேவனாகிய கர்த்தர் உதவிசெய்கிறவர் என்பதை எசேக்கியா ராஜா அறிந்திருந்தான். மனிதர்களால் உருவாக்கப்பட்ட தெய்வங்கள் உதவிசெய்யும் என்று பலர் நம்பினாலும், அவைகள் காதிருந்தும் கேளாத, கண்ணிருந்தும் காணாத உயிரற்ற உதவாக்கரைகள் என்பதாக வேதாகமம் குறிப்பிடுகிறது. ஆனால் உயிருள்ள உண்மையுள்ள தேவனாகிய கர்த்தரோ, “ஆபத்தில் என்னை நோக்கி கூப்பிடு. நான் உன்னை விடுவிப்பேன். நீ என்னை மகிமைப்படுத்துவாய்” என்று சொல்லுகிறார். எசேக்கியா ராஜா தேவனாகிய கர்த்தரை நம்பின படியே அவனையும் யூதா நாட்டு மக்களையும் அவர் விடுவித்தார்.
நம்முடைய தேவனாகிய கர்த்தர் உயிருள்ள உண்மையுள்ள உதவிசெய்யும் தேவன் என்பதை எசேக்கியா ராஜா அறிந்திருந்தபடியினாலேயே தனக்கும் தன் நாட்டு மக்களுக்கும் ஆபத்து வந்தபோது தேவனுடைய ஆலயத்தில் தேவனை நாடினான். நாமும் நமக்காகவும் பிறருக்காகவும் நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாடும்போது உதவி செய்ய அவர் போதுமானவர். தேவனுக்கே மகிமை உண்டாகட்டும். ஆமேன்.
