கர்த்தாவே உம் வார்த்தையால் படைத்து
மிகவும் நல்லது என்று கண்ட உம் படைப்புக்கள்
சீரழிவது கண்டு இரங்க மாட்டீரா?
உம் சாயலில் நீர் படைத்து
உம் குருதியால் நீ மீட்ட
மனிதர்கள் கொத்துக் கொத்தாய்
சாவதைப் பார்த்து
மனம் இரங்க மாட்டீரா?
நீர் விரும்பும்
நீதி, நியாயம்
இல்லாமல்
ஒடுக்கப்பட்டோர்
மடிவதைக் கண்டும்,
எளியவர் கட்சிக்காய்
வாதாடும் நீர் அமைதியாய்
இருக்கலாமா?
ஓய்வெடுத்து களைத்துவிட்டோம்
வீட்டிற்குள் இருந்து வெறுத்துவிட்டோம்
நகைச்சுவை சலித்துவிட்டது
உடன் படைப்புகளின்
பாடுகள்
கண்களை மங்கச் செய்கின்றன
சாப்பிட உணவும்,
ஓய்வெடுக்க வீடும்
சண்டையிடவும்
கொஞ்சிக் கொள்ளவும்
உறவுகளுடன் இருக்கும்
எங்களுக்கு
இதயம் மறத்துவிட்டதா
என்று தோன்றுகிறது.
சாப்பிடும் போதும்
சிரிக்கும் போதும்
குற்ற உணர்வு மேலிடுகிறது
இது கடைசிக்காலம்
கர்த்தாவே வாரும்
என்று ஜெபிக்கத் தோன்றுகிறது.
வாழ்வின் நன்மைகளை
சொட்டுக் கூட
அனுபவித்தறியாத
இளம் தலைமுறைகளுக்காகப்
பரிதாபம் மனதில் எழுகிறது.
அவர்களை விட நாங்கள்
எந்த விதத்தில் சிறப்பானவர்கள்?
எங்களை விட அவர்கள்
எவற்றில் எல்லாம் மோசமானவர்கள்?
கர்த்தாவே மனம் இரங்கும்…
எங்கள் பாவங்களே
காரணங்களாக இருந்தாலும்
நீ பாவத்தை வெறுத்து
பாவிகளை நேசிக்கிறவர் அல்லவா?
கர்த்தாவே இரங்கும்…
மனிதர்கள் மடியவது போதும்…
சில மனிதர்கள் மட்டும் மேற்கொள்வது போதும்…
இரக்கமுள்ளவரே…
அன்புள்ளவரே…
மன்னிக்கின்றவரே…
பரிதபிக்கிறவரே…
உம் குணங்களை நம்புகிறேன்….
இன்னும் ஒரு முறை உறுதிப்படுத்துமே….
சூழ்நிலைகள் தடுமாறச் செய்யும் போது…
வேதனைப்படுத்தும் போது…
உம் பெயர் அவமதிக்கப்படும் போது…
உம் பெயரைக் காத்துக்கொள்ள
எங்கள் உதவி தேவையில்லை என்றாலும்…
கர்த்தாவே இரக்கமாயிரும்.
கர்த்தாவே கிருபையாயிரும்.
ஒருவரும் நீதியுள்ளவர்கள் அல்ல
ஆகவே நியாயம் தீர்க்கப்பிரவேசியாதேயும்.
கர்த்தாவே
நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கட்டும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கட்டும்
ஆனால்,
நம்பிக்கையின்றி உயிரை மாய்த்துக் கொள்பவர்களும்
பசியிலும் வியாதியிலும் மாண்டு போகின்றவர்களும்
என் சகோதரர்களும் சகோதரிகளும்
தாயும் தகப்பன்களாகவும் இருக்கிறார்கள்.
என் குடும்பத்தின் இழப்பின் நடுவே
என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லையே…
எல்லோருக்கும் தந்தையே
பொறுத்தது போதும்…
நான் மட்டும் சாப்பிட்டு
நிம்மதியாக உறங்கும் போது
தன்னலத்துடன் இருப்பது போலத் தோன்றுகிறதே…
நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும்…
உம் தியாகத்தின் முன் என்னால் செய்யக் கூடியது எதுவும் இல்லை.
உம் வல்லமையின் முன் என்னால் நினைத்துப் பார்க்கக் கூடியது எதுவும் இல்லை.
கர்த்தாவே என் இயலாமை, கோபம், சோகம், கண்ணீர் இவைகள் மட்டுமே
என்னிடம் இருக்கின்றன.
உடைந்த உள்ளங்கள்,
இயலாமை
நொருங்கிப் போன
வாழ்வு
இவற்றை
காணிக்கையாக ஏற்றுக் கொண்டு
உம் சாயலில் நீர் உருவாக்கின
மக்களை மீட்டுவிடும்
உருவின உம் பட்டயத்தை
இத்துடன் நிறுத்திவிடும்…
எங்கள் பாவங்களை மன்னியும்.
எங்கள் உணர்வற்ற மனங்களை உடையும்
கர்த்தாவே இனி எப்படி வாழ வேண்டும்
என்று உணர்த்தும்…
இந்த அனுபவங்களை
மறக்காத மனம் தாரும்.
சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வர
தடை செய்யாதீர்கள் என்றீரே
தடையில்லாமல் அவர்கள்
உயிரில்லாமல் தான் உம்மிடம் வர வேண்டுமா?
கர்த்தாவே நீரே உயிர்த்தெழுதல் என்றீர்…
செத்த பின்னர் தான் உயிர்த்தல் கிடைக்கும்
என்பது உண்மை தான்…
ஆனால் உயிர்த்தலின் மகிமையைவிட
சாவின் கொடுமை
மூச்சடைக்கச் செய்கிறது.
உயிர்த்தலின் நம்பிக்கையே இல்லாமல்
மடிந்து போகிறவர்களுக்குப் பதிலாக
அந்த நம்பிக்கை உள்ள
என்னை எடுத்துக் கொள்ள
முடியுமா?
இருப்பதும் இறப்பது உம்
சித்தமே, உம் மகிமைக்காகவே…
ஆனாலும் இப்படிப்பட
இறப்புகளின் நடுவே
இருப்பதே இறப்பிலும்
கொடுமையாக இருக்கிறது…
பிணங்களின் நடுவே
வாழ்வது கொடுமை
சாவை ருசித்து
சாவை ஜெயித்தவரே
உயிரின் மதிப்பைக்
கற்றுக் கொடுக்கத் தான்
சாவை இத்தனை
உக்கிரமாக
அனுப்பியிருக்கிறீரா?
உம் படைப்பு நோக்கமில்லாதது அல்ல
உம் இரத்தம் வீணாக சிந்தப்படவில்லை
உம் ஞானம் எங்களுக்கு எட்டாதது
உம் இரக்கத்தையும், கிருபையையும்
இன்னொரு தடவை ஊற்றிவிடும்.
எது வரைக்கும்
கர்த்தாவே…..?
