கிறிஸ்தவ வாழ்வும் ஆவிக்குறிய அனுபவங்களும்

கிறிஸ்தவ வாழ்வும் ஆவிக்குறிய அனுபவங்களும்

சில வருடங்களுக்கு முன் I shouldn’t be alive (நான் பிழைத்திருக்க வாய்ப்பில்லை) என்ற நிகழ்ச்சியை டிஸ்கவரி சேனலில் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த நிகழ்ச்சி மிக கடினமான சூழல்களில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள் பற்றியது. நான் பார்த்துக்கொண்டிருந்த அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சி நடுக்கடலில் தனியாக சிக்கி உயிர்பிழைத்த ஒரு நபரை பற்றியது. 

சில நண்பர்களாக சேர்ந்து ஒரு சிறிய விமானத்தில் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். அந்த விமானம் கடலின்மேல் பறந்துகொண்டிருக்கும்போது திடீரென்று பழுதடைகிறது. விமானம் வேகமாக கடலில் விழுந்து உடைந்துவிடும் அபாய நிலையில் ஒவ்வொருவராக பாராசூட் கட்டிக்கொண்டு கடலில் குதித்துவிடுகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் காட்டப்பட்ட குறிப்பிட்ட நபரும் பாராசூட் உதவியுடன் கடலில் வந்து விழுகிறார். 

அவரது நண்பர்கள் யாரும் அருகில் விழவில்லை. கத்தி அழைத்து பார்க்கிறார், யாரும் குரல் கொடுக்கவில்லை. சுற்றிலும் பார்க்கிறார். எங்கு பார்த்தாலும் தண்ணீர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கரை தெரியவில்லை. நீந்தவேண்டும் என நினைக்கிறார். ஆனாலும் எதை நோக்கி நீந்துவது என்கிற எண்ணத்தில் நீந்தும் எண்ணத்தை கைவிட்டு மிதந்துகொண்டே இருக்கிறார். 

பல மணி நேரங்கள் ஆகிறது. விமானம் குறிப்பிட்ட நேரத்தில் கரைக்கு வராதததை அறிந்த உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கிறார்கள். தேடுதல் வேட்டை ஆரம்பிக்கிறது. இரவு பகல் என இரண்டு நாட்கள் கடக்கிறது. நடுக்கடலில் மிதந்துகொண்டே இருக்கிறார். காப்பாற்ற யாரும் வரவில்லை. உடலெல்லாம் சோர்வு. கடுமையான பசி தாகம். சுற்றிலும் தண்ணீர். ஆனாலும் குடிக்க முடியாது. குடித்தால் உடலில் நீர் வற்றிப்போதல் இன்னும் வேகம் ஆகி ஆபத்தாகிவிடும். திடீரென அந்த இடத்தை கடந்துபோகும் ஜெல்லி மீன்கள் கூட்டத்தில் மாட்டிக்கொள்கிறார்.  ஜெல்லி மீன்கள் கொட்டுவதால் உடலெல்லாம் இன்னும் வலி கூடுகிறது. உடல் பெலவீனப்பட்டுக்கொண்டே இருப்பதால் எப்போதும் மூர்ச்சையாவோம் எப்போது வேண்டுமானாலும் மரணம் வரலாம் என நினைக்கிறார்.

அந்த இரவிலும் தொடர்ந்து மிதந்துகொண்டே இருக்கிறார். இரவில் நிலவு வெளிச்சத்தில் அவரை நோக்கி ஏதொ ஒன்று நீந்தி வருவதாக தெரிகிறது. கதிகலங்கி விடுகிறார். கண்டிப்பாக சுறா மீனாகத்தான் இருக்கும் என நினைக்கிறார். வேகமாக நீந்தி தப்பிக்க நினைக்கிறார். உடலில் சக்தியில்லை. அருகில் நெருங்க நெருங்க அதின் உடல் வழுவழு என்று இல்லாமல் சொறசொறப்பாக இருப்பதை கவனிக்கிறார். கடல் முதலையாக இருக்கும் என நினைத்து தனக்கு இப்படித்தான் முடிவு வரவேண்டுமா என மனம் நொந்து போகிறார்.

பக்கத்தில் வரும்போது பார்த்தால் அது ஒரு பெரிய மரக்கட்டை.  அத்தனை வேதனையிலும் சிரித்துவிடுகிறார். அதை தனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக எண்ணி அந்த மரக்கட்டையை பிடித்துக்கொண்டே மிதந்துகொண்டிருக்கிறார். இப்படியே ஒரு நாள் கடக்கிறது. அந்த மரக்கட்டையை பிடித்துக்கொண்டே மூர்ச்சையாகி விடுகிறார்.

திடீரென கண்விழித்து பார்க்கிறார். கண்ணுக்கெட்டிய தூரத்தில் கரை தெரிகிறது. மனதிலே ஒரு நம்பிக்கை வெளிச்சம். மரக்கட்டையை பிடித்துக்கொண்டே கரையை நோக்கி நீந்த ஆரம்பிக்கிறார். கரையில் மோதிவிட்டு வரும் நீர் உள்ளிழுக்கிறது. தொடர்ந்து முயற்ச்சி செய்கிறார். முடியவில்லை. எந்த மரக்கட்டை தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றி இவ்வளவு தூரம் கொண்டுவந்ததோ அதே மரக்கட்டை தன்னை கரைக்கு போகவிடாமல் உள்ளிழுப்பதை கவனிக்கிறார். என்னசெய்வதென்று தெரியவில்லை. தொடர்ந்து மரக்கட்டையை பிடித்துக்கொண்டிருக்கவா? அல்லது மரக்கட்டையை விட்டுவிட்டு கரையை நோக்கி நீந்தவா? ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம்.  மரக்கட்டையை விட்டுவிட்டு மீதமிருக்கும் முழு பெலத்தையும் பயன்படுத்தி கரையை நோக்கி நீந்த ஆரம்பிக்கிறார்.

அவர் கரையை நோக்கி நீந்தி சென்றுகொண்டிருக்கும் நேரத்தில் மீன் பிடிப்பதற்க்காக படகில் செல்லும் மீனவர்கள் அவரை பார்த்து அவரை தங்கள் படகில் ஏற்றி காப்பாற்றுகிறார்கள். 

இந்த சம்பவத்தில் கடலில் தத்தளித்த அந்த நபரை கிறிஸ்தவராக கருதுவோமானால் அந்த மரக்கட்டையை நான் ஆவிக்குறிய அனுபவத்துக்கு ஒப்பிடுவேன். வாழ்வின் ஒரு குறிப்பிட்ட சூழலில் தேவனுடைய அனந்த ஞானத்தால் சில ஆவிக்குறிய அனுபவங்கள் தேவனுடைய சித்தப்படி நமக்கு கொடுக்கப்படலாம். நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த அந்த நபர் கடவுளிடம் என்ன வேண்டியிருப்பார். மீட்புப்படையினர் விமானத்திலோ படகிலோ வந்து தன்னை காப்பாற்ற வேண்டும் என வேண்டியிருபார். ஆனால் கிடைத்ததோ மரக்கட்டை. அதுவும் இரண்டு நாளைக்கு பிறகு. நாம் வேண்டுவதை அல்ல, நாம் நினைக்கும் நேரத்திலும் அல்ல. அவருக்கு சித்தமானதை அவருக்கு விருப்பமான நேரத்தில் அவரே கொடுக்கிறார். 

இரண்டாவதாக, எந்த மரக்கட்டை அவரை காப்பாற்றி கரையை நோக்கி கொண்டுவந்ததோ, அதே மரக்கட்டை ஒரு குறிப்பிட்ட சூழலில் அவரை கரையை நெருங்கவிடாமல் தடுத்தது. நமது வாழ்விலும் எந்த ஆவிக்குறிய அனுபவம் நாம் தத்தளித்துக்கொண்டிருந்த நேரத்தில் நம்மை ஆவிக்குறிய வாழ்வில் நம்மை கரை சேர்த்ததோ அதே அனுபவம், அதை நாம் விடாமல் பற்றிக்கொண்டிருப்போமானால், நமது ஆவிக்குறிய வாழ்வில் நாம் முதிர்ச்சியடைவதை தடுத்துவிடும். 

மூன்றாவதாக, அந்த மனிதர் என்ன நினைத்திருப்பார். கடவுள்போல என்னை காப்பாற்றின இந்த மரக்கட்டையை நான் என்னோடு வீட்டுக்கு எடுத்துச்செல்வேன். இதை பத்திரப்படுத்தி என்னோடு வைத்துக்கொள்வேன். என் வாழ் நாள் முழுவதும் இதை பிரியமாட்டேன் என நினைத்திருக்கலாம். ஒருவேளை அப்படி நடந்திருந்தால் அந்த மரக்கட்டையை அவர் ஒரு விக்கிரகமாகவே மாற்றியிருக்கலாம்.  கடவுளாலேயே கொடுக்கப்பட்டதாயினும் ஒரு அனுபவம் எந்த நோக்கத்துக்காக கொடுக்கப்பட்டதோ அந்த நோக்கம் முடிந்த பிறகும் அதை நாம் வைத்துக்கொண்டிருக்க நினைப்போமானால், அந்த அனுபவம் நமது வாழ்வில் ஒரு விக்கிரகமாக மாறும் அபாயம் உண்டென்பதை மறக்கவேண்டாம்.

1 கொரிந்தியர் 13 :10-11 நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.   

2 தீமோதேயு 2:7 நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்.

https://youtu.be/u2Rq22gchuY

Leave a Reply