பாவத்தின் சம்பளம் பேரழிவு

பாவத்தின் சம்பளம் பேரழிவு

பாவத்தின் சம்பளம் பேரழிவு

ஆதாம் ஏவாளுக்கு இன்னும் பல குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் மூலமாக மனுக்குலம் உலகில் பெருக ஆரம்பித்தது. மனுக்குலம் படைக்கப்பட்டு கிட்டத்தட்ட 1500 வருடங்கள் கடந்திருந்தது. உலகில் மக்கள்தொகையும் கணிசமான அளவில் பெருகியிருத்தது. ஆனால் பெருகினது மக்கள்தொகை மட்டும் அல்ல, பாவமும்தான். மனிதருடைய பாவ நிலையினால் உலகம் முழுவதும் பாவ செயல்களால் நிறைந்திருந்தது (ஆதி. 6:5). மனிதர்கள் தங்கள் சுபாவத்திலேயே பாவிகளாக இருந்தபடியினால் அவர்கள் செய்ததெல்லாம் பாவமாகவே இருந்தது.

மனிதரின் அக்கிரமம் பூமியிலே பெருகி கிடந்தது. பாவம் கடவுளை வேதனை படுத்தியது.  ஆம் மனிதர் செய்யும் எந்த பாவமும் அடிப்படையில் அவர்களைப் படைத்த கடவுளைத்தான் காயப்படுத்துகிறது. மனிதரைப் படைத்ததற்காக கடவுள் வருந்தினார். இப்படியே மனுக்குலத்தை விட்டுவிட்டால் மனிதரின் அக்கிரமம் முற்றி முழு மனுக்குலமும் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் என்பதை கடவுள் நன்கறிவார். எனவே மனிதரின் பாவத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கடவுள் ஒரு முக்கியமான காரியத்தை செய்தார். கடவுள் வெள்ளத்தினால் முழு உலகத்தையும் அழிக்க தீர்மானித்தார். ஒரு பேரழிவை உலகத்தில் அனுமதித்து அதன்மூலம் உலகத்தில் பாவத்தின் வீரியத்தை ஒரு கட்டுக்குள் கொண்டுவர நினைத்தார்.

கடவுள் பரிசுத்தர். பாவத்தை சரிப்படுத்துவதற்க்காக எந்த எல்லைக்கும் போவார்.

கடவுளின் கிருபை எனும் நம்பிக்கைக்கை ஒளிக்கீற்று

கடவுள் ஒரு பேரழிவை உலகத்தில் கொண்டுவர தீர்மானித்தாலும், தான் படைத்த மனுக்குலம் முழுவதையும் அழித்துப்போடாமல் பாதுகாக்கவும், வரப்போகும் பேராபத்திலிருந்து அவரை நம்புகிற மனிதர்கள் தப்பிதுக்கொள்ளவும் தன்னுடைய கிருபையினால் வாய்ப்பு ஒன்றை வழங்கினார். கடவுள் நோவா எனும் மனிதனை தேர்ந்தெடுத்தார். நோவா மற்றவர்களை காட்டிலும் வேறுபட்டவர் அல்ல. எனினும் நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது (ஆதி. 6:8). காரணம்: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான். அதற்குக் காரணம்: நோவா தேவனோடே உறவாடிக்கொண்டிருந்தான் (ஆதி. 6:9).  தான் இந்த உலகத்தில் அனுமதிக்கப்போகும் பேரழிவையும் நோவா செய்யவேண்டிய காரியத்தையும் சொன்னார்.

அவரை நம்புகிற நபர்கள் பாதுகாக்கப்படவும், மனிதர்கள் இந்த உலகத்தில் தொடர்ந்து வாழ்வதற்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளும் அழிந்துபோய்விடாமல் பாதுகாக்கப்படவும் “ஒரே ஒரு வாசலை உடைய ஒரு பெரிய கப்பல்” ஒன்றை செயும்படி நோவாவைப் பணித்தார். உலகின் அத்தனை உயிர்களையும் பாதுகாக்க “ஒரு” கப்பல். அந்த ஒரு கப்பலுக்குள் போக “ஒரு” வாசல். இதற்கு முன் மழை என்ற ஒன்று பெய்ததில்லை என்பதும், தண்ணீரின் மேல் மிதக்கும் கப்பல் என்கிற ஒன்றை மனிதர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. கப்பலின் நீளம், அகலம், உயரம், கப்பல் கட்ட பயன்படுத்தப்பட வேண்டிய மரம், கப்பல் கட்டப்பட வேண்டிய விதம் அனைத்தையும் கடவுளே நோவாவுக்கு சொல்லிக்கொடுத்தார்.

நோவாவின் விசுவாசம்

கடவுளின் கிருபை, நோவாவை கடவுளின் வார்த்தையை நம்பவும், கீழ்ப்படியவும் செய்தது. நோவா முன்னின்று கடவுள் பணித்த வேலையை செய்து முடித்தார். நோவாவின் இந்த செயலே வரப்போகும் பேராபத்தை பற்றி மற்ற மக்களை எச்சரிப்பதாக அமைந்தது. கிட்டத்தட்ட 120 வருடங்கள் நோவா இந்த கப்பல் கட்டும் பணியில் ஈடுபட்டார். எனினும் யாருமே நோவாவை கண்டுகொள்ள வில்லை. கடவுள் கப்பலுக்குள் பாதுகாக்கும்படி சொன்ன உயிரினங்கள் மற்றும் நோவாவின் குடும்பம் தவிர யாரும் கப்பலுக்குள் வரவில்லை. கடவுள் சொன்ன நாளும் வந்தது. நோவா, நோவாவின் மனைவி, நோவாவின் மூன்று மகன்கள், அவர்களது மனைவிமார்கள், ஆகிய எட்டு நபர்கள் மட்டும் கப்பலுக்குள் இருந்தார்கள். அவர்களை உள்ளே வைத்து கடவுள் கதவை அடைத்தார்.

வானத்திலிருந்து மதகுகளை திறந்து விட்டது போல பெருமழை பெய்தது. பூமியின் ஆழத்திலிருந்தும் பெரும் ஊற்றுக்கள் திறந்தது. சில மணி நேரத்திற்குள் தாங்கள் மாட்டிக்கொண்ட பேராபத்தை மக்கள் உணர்ந்திருப்பார்கள். கப்பலுக்குள் நுழைய முயன்றிருப்பார்கள். அந்தோ பரிதாபம்! காலம் கடந்துவிட்டது. நாற்பது நாள்கள் விடாமல் இந்த சூழல் தொடர்ந்தது. முழு பூமியும் நீருக்குள் மூழ்கியது. கப்பலுக்குள் இருந்த நபர்கள் மற்றும் உயிர்கள் தவிர, அனைத்து நபர்களும் உயிர்களும் அழித்து போயின.

கடவுள் தன்னிடம் வருவதற்கு எப்பொதும் ஒரே ஒரு வழியையே உண்டுபண்ணுகிறார். கடவுளின் வார்த்தையை நம்பியவர்கள் பிழைத்தார்கள். கடவுளின் வார்த்தையை நம்பாதவர்கள் அழிந்தார்கள். நோவாவின் குடும்பம் தவிர்த்து மற்றவர்களும் கப்பலுக்குள் வருவதற்கு கடவுள் தடை ஏதும் விதிக்கவில்லை. கடவுள் முன்னறிவித்த பேரழிவின் நிச்சயத்தை நம்பி அதிலிருந்து தப்பிக்க அவரே ஏற்படுத்திய ஒரே வழியான கப்பலுக்குள் யார் வந்திருந்தாலும் அவர்கள் பேரழிவிலிருந்து பிழைத்திருப்பார்கள். பாவ மனிதர் அழிந்து போக காரணம் அவர்கள் பாவமே. ஆனால் அவர்கள் பிழைக்காமல் போனதற்க்கு அவர்கள் கடவுளின் வார்த்தையை நம்பாததே காரணம். அவிசுவாசமே அழிவுக்கு காரணமாக அமைந்தது.

பாவத்தின் சம்பளம் பேரழிவு

பாவத்திலே சின்ன பாவம், பெரிய பாவம் என்று கிடையாது. அதுபோலவே பாவியிலும் சின்ன பாவி பெரிய பாவி என்றேல்லாம் கிடையாது. கடவுளின் பார்வையில் எல்லா மனிதர்களும் பாவிகளே! எல்லா பாவமும் சமமானதே!  பாவம் நெருப்பு போன்றது. ஒரு சிறிய நெருப்பு பொறிக்கு எவ்வளவு பெரிய காட்டையும் கொழுத்திவிடும் வல்லமை உண்டு. அதுபோலவே ஒரு சிறிய பாவம், விளையாட்டுத்தனமாய் சொல்லப்படும் ஒரு பொய் கூட எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று யாராலும் கணிக்க முடியாது. ஆதாம் கடவுள் உண்ணக்கூடாது என்று சொன்ன ஒரு கனியை உண்டது பார்ப்பதற்கு ஒரு சிறிய காரியமாக தோன்றலாம். ஆனால் அதனால் உண்டான விளைவுகளை உலகம் மிக வேதனையோடு அனுபவித்தது.

முடிவுகள்

பரிசுத்த கடவுள் பாவத்தை கண்டிப்பாக நியாயம் தீர்த்து அதை ஒரு முடிவுக்கு கொண்டுவருவார். எனினும் தான் அதை செய்வதற்கு முன் அதை குறித்த எச்சரிப்பையும் அதிலிருந்து தப்பிபிழைப்பதற்கான ஒரே வழியையும் அவரே எப்பொழுதும் உண்டுபண்ணுகிறார். கடவுளின் வழி எப்போதுமே நம்பிக்கையின் வழி. அவர் வார்த்தையை (சொல்வதை) நம்புகிறவர்கள் பிழைப்பார்கள்.

பாவத்தின் சம்பளம் குழப்பம்>>

Leave a Reply