வேதாகம அடிப்படை அற்புதம்

வேதாகம அடிப்படை அற்புதம்

இந்த பதிவில் அற்புத சுகம் கொடுப்பதாக சொல்லி எப்படி போலி ஊழியர்கள் அநியாயம் செய்கிறார்கள் என்பதை வேதாகமத்தின் அடிப்படையில் நிறுவபோகிறேன். இந்த பதிவை வாசித்து முடிக்கும்போது அற்புதம் சுகம் கொடுப்பதாக சொல்லித்திரியும் போலி ஊழியர் பக்கம் தலை வைத்துக்கூட படுக்கமாட்டீர்கள்.   

இது கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம். நான் திருச்சியில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கேம்பஸ் குருசேட் மூலமாக மிசனரியாக ஊழியம் செய்துகொண்டிருந்த காலத்தில் நடந்த உண்மை சம்பவம். ஒரு வல்லமையுள்ள ஊழியக்காரர் அற்புத சுகமளிக்கும் வரங்களை பெற்றவர் திருச்சிக்கு கூட்டம் நடத்த வருவதாக பெரும் விளம்பரம் செய்யப்பட்டது.

நான் வாரத்துக்கு இரண்டு நாட்கள் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரிக்கு தம்பிமாரை சந்திக்க போவேன். விடுதிகளுக்கு முன்னால் இருக்கும் சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பேன். ஒரு நாள் தம்பிமார் உற்சாகமாக வந்தார்கள். அண்ணன் நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு நல்ல விஷயத்துக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறோம் என்றார்கள். என்னடா? என்று கேட்டேன்

விஷயம் இதுதான். அவர்களோடு படித்துக்கொண்டிருந்த அவர்களின் இந்து நண்பன் ஒருவனுக்கு ஒரு கண்ணில் முழுமையாக பார்வை கிடையாது. கண்ணே இருக்காது. அற்புத வரம் பெற்ற இந்த ஊழியர் திருச்சிக்கு வருகிறார் என்ற உடன் தம்பிமாருக்கெல்லாம் உற்சாகம் தாங்கவில்லை. அவர்கள் அதிகம் நேசிக்கும் அந்த இந்து நண்பனுக்கு எப்படியாவது இல்லாத அந்த கண்ணை பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என நினைத்திருக்கிறார்கள். எனவே இவர்கள் எல்லாம் அந்த நண்பனிடம் போய், ஒரு அற்புதம் செய்யும் வல்லமையுள்ள ஊழியர் திருச்சிக்கு வருகிறார். அவரால் உனக்கு இல்லாத கண் பார்வையை வரவைக்க முடியும். நாங்கள் எல்லாரும் உனக்காக ஜெபிக்கிறோம். அந்த ஊழியர் வரும்போது எங்களுடன் வா. அவரை போய் பார்த்து கண்பார்வையை கொண்டுவந்துவிடலாம் என சொல்லியிருக்கிறார்கள். 

எனக்கு திக்கென்று அதிர்ச்சியாக இருந்தது. நான் எதுவுமே சொல்லவில்லை. நான் ஏதாவது சொல்லப்போய் இந்த தம்பிமார் என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டால் என்ன செய்வது? தம்பிமாருக்கு நல்ல பாடம் கிடைக்கப்போகிறது என்பது மட்டும் தெரிந்தது. மனசுக்கு கஸ்டமாக இருந்தது.   

தம்பிமார் தொடர்ந்து ஜெபித்தார்கள். அந்த இந்து நண்பனுடைய வீட்டிற்கெல்லாம் கூட போன் செய்து “அம்மா கண்டிப்பாக உங்கள் பையனுக்கு கண் வந்துவிடும்” என்று சொல்லிவிட்டார்கள். 

குறிப்பிட்ட நாளும் வந்தது. அது ஒரு மூணு நாள் மீட்டிங். கூட்டமாக அந்த பையனையும் கூட்டிக்கொண்டு அற்புத ஊழியர் வந்திருந்த அந்த திடலுக்கு போயிருக்கிறார்கள். மீட்டிங் முடிந்ததும் இந்த பையனையும் கூட்டிக்கொண்டு மேடைக்கு போவிட்டார்கள். அந்த அற்புத வரம் பெற்ற ஊழியர் கண்ணில் கைவைத்து ஜெபிப்பார். உடனே இல்லாத கண் வந்துவிடும். ஒரு அற்புதத்தை நேரில் பார்க்கலாம் என்கிற ஊற்சாகத்தில் இருந்திருக்கிறார்கள். 

மேடைக்கு போய் விஷயத்தை சொன்னதும் அந்த அற்புத வரம் பெற்ற ஊழியரும்  ஜெபித்திருக்கிறார். கண் வரவில்லை. வருத்தப்படாதீர்கள் தொடர்ந்து ஜெபியுங்கள். நாளைக்கும் வாருங்கள். நாளைக்கு சரியாகிவிடும் என கூச்சமே இல்லாமல் சொல்லி அனுப்பிவிட்டார். தம்பிமார் அடுத்த நாளும் பையனை கூட்டிக்கொண்டு மீட்டிங் போயிருக்கிறார்கள். அதே போல் மேடை ஜெபம். கண் வரவில்லை. இன்னும் நல்லா ஜெபியுங்கள். நாளைக்கு வாருங்கள். கடைசி நாள் கண்டிப்பாக அற்புதம் நடக்கும் என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டார். கடைசி நாள் மீட்டிங். தம்பிமாரெலாம் பெரும் எதிர்பார்ப்போடு போயிருக்கிறார்கள். மீண்டும் ஜெபித்திருக்கிறார். அந்தோ பரிதாபம். அன்றும் கண் வரவில்லை. என்ன சொன்னாராம் தெரியுமா? அதுதான் ஹைலைட்டே! தம்பிகளா உங்களுக்கெல்லாம் விசுவாசம் இல்ல. அதனாலதான் ஆண்டவரால அற்புதம் செய்ய முடியல. போங்க என்று அனுப்பி வைத்துவிட்டார். 

இந்த மீட்டிங் முடிஞ்ச பிறகு தம்பிமார பாத்தேன். முகமெல்லாம் தொங்கிப்போய் சோகமா இருந்தானுங்க. என்னடா ஆச்சுனு கேட்டேன். அண்ணே அந்த பையனுக்கு கண் வரலணே. எங்களுக்கு விசுவாசம் இல்லனு சொல்லி அனுப்பி விட்டுட்டாருணே நு பதில் வந்தது. 

எவ்வளவு கள்ளத்தனமான பதிலை அந்த போலி ஊழியர் சொல்லி அனுப்பியிருக்கிறார். இதைத்தானே பெரும்பாலான ஊழியர்கள் சொல்கிறார்கள். அற்புதம் நடக்கவில்லை என்றால் உங்களுக்கு விசுவாசம் இல்லை என்று நைசாக நழுவிக்கொள்கிறார்களே? இதை வாசித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கும் கேள்விகள் வரலாம். ஏன் அற்புதம் நடைபெறவில்லை? உண்மையில் இங்கே விசுவாசம்தான் பிரச்சனையா? 

மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறீர்களா?

அற்புதங்கள். அற்புதங்கள் பிடிக்காதவர்கள் யாரும் இந்த உலகத்தில் இல்லை. சரித்திரத்தில் வேறெப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைய கிறிஸ்தவம் அற்புதங்களால் நிரம்பி வழிகிறது. சில மாதங்களுக்கு முன்னால் முகனூலில் ஒரு விளம்பரம் பார்த்தேன். பத்து பேரை உயிரோடு எழுப்பிய வல்லமையான ஊழியர் என்று போட்டிருந்தார்கள். அடேங்கப்பா இயேசு நாதர் கூட இத்தனை பேரை உயிரோடு எழுப்பலயே! பெரிய ஆள்தான் இவர், என்று ஒரு நண்பர் பதில் போட்டிருந்தார். வேதாகமத்தின் அடிப்படையில் அற்புதங்கள் என்றல் என்ன? வேதாகமத்தில் அற்புதங்களின் நோக்கம் என்ன என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

தற்போது நடக்கும் கிறிஸ்தவ கூட்டங்களிலே நாம் பல அற்புத சாட்சிகளை கேட்கிறோம். பெரும்பாலும் நோய்களில் இருந்து குணம் கிடைப்பதே அற்புதங்கள் என்று கருதப்படுகிறது. வயிற்றில் இருந்த கட்டி மறைந்தது. தலை வலி சரியானது. மூட்டு வலி சரியானது போன்ற சாட்சிகள் அற்புதங்களாக கருதப்படுகிறது.  வேதாகமம் அற்புதங்கள் என்று எவைகளை சொல்கிறது என்பதை சற்று நிதானிப்போம்.

அற்புதம் என்கிற வார்த்தை தற்போது எல்லாவற்றிற்க்கும் பயன்படுத்துகிற வார்த்தையாகிப்போனது. ஆனால் எது உண்மையில் அற்புதம் என்பதை நாம் ஊன்றி கவனிக்க வேண்டும். வேதாகமத்தில் அற்புதம் என்றால் இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல் என்பதாகவே சொல்லப்படுகிறது. அறிவியலால் விளக்க முடிந்த எல்லாருக்கும்  நடக்க வாய்ப்பிருக்கும் ஒன்று பெரிய அற்புதமாக சொல்லப்படுவது இல்லை.

எனக்கு மிக அவசரமாக ஒரு குறிப்பிட்ட தொகை பணம் தேவைப்பட்டது. என்னிடத்தில் கொஞ்சம் கூட பணமே இல்லை. நானும் என்னால் இயன்ற வரை முயற்ச்சி செய்தேன். எங்கும் பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. எங்கே சிக்கலில் மாட்டிக்கொள்வேனோ என்று பயந்துகொண்டிருந்தேன். கடவுளிடம் ஜெபித்துக்கொண்டே இருந்தேன். திடீரென்று நான் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் வந்தது. நான் தப்பித்துக்கொண்டேன். கடவுள் எனக்கு அற்புதம் செய்தார். இது அற்புதமா?  உண்மையில் இது அற்புதம் இல்லை. இது தெய்வீக அக்கறை. கடவுள் தான் படைத்த படைப்புகளின் மேல் மிகுந்த அக்கறை உள்ளவராக இருக்கிறார். அவர் இப்படிப்பட்ட இக்கட்டான சூழல்களில் உலகில் உள்ள சூழல்களை பயன்படுத்தி, மனிதர்கள் மூலமாக தேவைகளை சந்திக்கிறார்.  

கடந்த ஒரு வாரமாக கடுமையான தலைவலி மற்றும் காய்ச்சல். மாத்திரை போட்டும் சரியாகவில்லை. கூட்டத்திற்க்கு வந்தேன். சகோதரர் தலையில் கைவைத்து ஜெபித்த உடன் என் தலைவலியும் காய்ச்சலும் குணமாகி விட்டது. கடவுள் எனக்கு அற்புத சுகம் தந்தார். இது அற்புதமா? உண்மையில் அங்கே நடந்திருப்பது ஒரு உளவியல் மாற்றம். 

தலைவலி காய்ச்சல் எல்லாம் பெரும் நோய்களாக கருதும் மக்கள் இருக்கிறார்கள். உண்மையில் காய்ச்சல் தலைவலி எல்லாம் நோய்கள் அல்ல. உடலிலோ மனதிலோ இருக்கும் ஏதோ ஒரு பிரச்சனையின் அறிகுறி. உடல் பிரச்சனையின் அறிகுறி என்றால் மருந்து கொடுத்தால் சரியாகும். மனப் பிரச்சனையின் அறிகுறி என்றால் மருந்துக்கு சரியாகாது. அப்படிப்பட்ட சூழலில் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வரும்போது அங்கே ஆறுதலாக நாலு வார்த்தையை கேட்டு ஜெபம் செய்யும்போது ஏதோ ஒரு விதத்தில் அவர்களின் உளவியல் தேவை சந்திக்கப்பட்டு இந்த தலைவலி காய்ச்சல் சரியாகும்.

அது மட்டுமல்ல இப்படிபட்ட சாட்சிகளை நாம் விக்ரக வணக்கக் காரர்களிடம் கூட கேட்க முடியும். (probability, chance என்று ஏராளமான காரணிகள் இதில் இருக்கலாம்)

இப்படிப்பட்ட உளவியல் பிரச்சனைகள் ஏராளம் இருக்குது. தலைவலி, உடல்வலி, கை கால் வலி, தோல் எரிச்சல்,  காய்ச்சல், சோர்வு, அசதி, அதிக தூக்கம், தூக்கமின்மை இது எல்லாமே மனப்பிரச்சனையின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். எனக்கு எலும்புல வலிக்குது, எனக்கு நரம்புல இழுக்குது, எனக்கு மூச்சு முட்டிக்கிட்டு வருது இப்படியெல்லாம் சொல்லி ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா அலையுற மக்கள் எவ்வளவு இருகாங்க. முழு உடம்பையும் ஸ்கேன் பண்ணீட்டு உங்களுக்கு ஒண்ணும் இல்லம்மா நு டாக்டர் சொன்னா, வீட்டுக்கு வந்ததும் அந்த டாக்டருக்கு ஒண்ணும் தெரியல, நாம வேற டாக்டர பாக்க போலாம்னு கெளம்புற மக்களை நீங்க என்ன சொல்வீங்க? மனப்பிரச்சனைதான் காரணம். கூட்டங்களுக்கு வரும்போது ஆறுதல் வார்த்தைகளை கேட்டால் இது தற்க்காலிகமாக சுகமாகும். (உங்களுக்கு தெரிந்த மருத்துவரிடம் இப்படி ஒன்று இருக்கிறதா என கேளுங்கள். ஆம் என்பார்.)

இப்படிப்பட்ட ஆட்களை பிடிப்பதற்க்ககவே கூட்டத்தோடு கூட்டமாக ஆள் விட்டிருப்பார்கள். உடனே மேடையேற்றி சகோதரன் ஜெபித்தபோது அற்புத சுகம் பெற்ற தாயார் நு விளம்பரம் பண்ணிவிடுவார்கள்.        

நான் எனது உயர் நிலை பள்ளிக் கல்வியை விடுதியில் இருந்து கற்றேன். சுகவீனப்படும்போது பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்புவார்கள். சில நேரங்களில் இரண்டு மூன்று நாள் ஆனாலும் காய்ச்சல் சுகமாகாது. அப்படிப்பட்ட நேரங்களில் சில நாள் விடுப்பு கொடுத்து வீட்டுக்கு அனுப்புவார்கள். அந்த நாட்களை மறக்க முடியாது. வீட்டுக்கு போய்ட்டு உடம்பு சரியாதும் வாப்பா. போய் லீவ் லெட்டர் எழுதிட்டு வான்னு சொல்லுவாங்க பாருங்க. அத சொன்ன உடனே காய்ச்சல் குறைய ஆரம்பிச்சுரும். லீவ்லெட்டர் எழுதி கையெழுத்து வாங்கும் போது பாதி காய்ச்சல் இருக்காது. மனசுக்குள்ல நெனைப்பேன். ஆகா வீட்டுக்கு கெளம்புறதுகுள்ள காய்ச்சல் சரியாரும் போல இருக்கே. கண்டுபிடிச்சிட்டாங்கன்னா வீட்டுக்கு போகக்கூடாதுனு சொல்லிருவங்களேன்னு பயமா இருக்கும். ஹாஸ்டல் காம்பவுண்ட விட்டு வெளிய வந்து வீட்டுக்கு பஸ் ஏறும்போது ஒரு காச்சல் இருக்காது. கழுத்துல கைய வைச்சி பாத்தா சும்மா ஜில்லுனு இருக்கும். நமக்கு அடுத்த கவல வந்துரும். வீட்டுல போய் என்ன சொல்றது. காய்ச்சல்னு சொன்னா உடனே கழுத்த தொட்டு பாப்பாங்களே! 

இதனால் சாதாரண பிரச்சனைகளில் கடவுள் இடைபடுவதே இல்லை என சொல்லவரவில்லை. சின்ன பிரச்சனைகளுக்கு கூட நாம் ஆண்டவரிடம் ஜெபிக்கலாம் தவறில்லை. எல்லாவற்றையும் ஆண்டவர்தான் செய்கிறார். எந்த பிரச்சனையுடன் இயேசுவிடம் மக்கள் வந்தாலும் அவர்களுக்கு ஆண்டவர் உதவி செய்தார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சாதாரண காய்ச்சல் கூட இயேசு குணமாக்கவே செய்தார். ஆனால் வேதாகமத்தில் “அற்புதம் (Miracle)” என்கிற வார்த்தை முக்கியமானது (Technical term). 

அப்படியானால் வேதாகம அற்புதம் என்பது என்ன? வேதாகம அற்புதம் என்பது இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதம். இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதம். அறிவியல் பூர்வமாகவோ, மருத்துவ ரீதியாகவோ எந்த விளக்கத்தையும் கொடுக்க முடியாமல் இருப்பதையே வேதாகமம் அற்புதம் என்று அழைக்கிறது. இப்படிப்பட்ட இயற்க்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களை செய்யும் வல்லமையை பெற்றவர்களே வேதாகமத்தில் அற்புதங்களை செய்யும் வரம் பெற்றவர்களாக அறியப்படுகிறார்கள். மற்ற சாதாரண விஷயங்களை அவர்கள் செய்திருந்தாலும் கூட “இயற்கைக்கு அப்பாற்பட்ட” “அற்புதங்களை” செய்வதுதான் அவர்களுக்கு அற்புதம் செய்யும் வல்லமை இருக்கிறது என்பதற்கான ஆதாரமாக வேதாகமம் முன்வைக்கிறது. வேதாகமத்தை கவனமாக வாசிக்கும் எந்த வேதாகம மாணாக்கனாலும் இதை மறுக்க முடியாது.   

அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைத்தான் அப் 3 ஆவது அதிகாரத்தில் நாம் பார்க்கிறோம். பிறவியிலேயே நடக்க இயலாத நிலையில் ஊனமுற்ற நிலையில் பிறந்த ஒரு நபரை பேதுருவும் யோவானும் ஒற்றை வார்த்தையில் குணமாக்குவதை நாம் பார்க்கிறோம். இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு வேதாகம ரீதியான அற்புதம் என்பது என்ன? என்பதையும் வேதாகம அடிப்படையிலான அற்புதங்களுக்கு இடையிலான ஒற்றுமைகளையும் நாம் பார்க்கலாம்.

*முதலாவது வேதாகம அற்புதம் உடனடியானது. (Immediate)*

வேதாகமத்தின் அற்புதங்கள் அனைத்தும் உடனடியாக நடப்பது. On the spot என்று சொல்வார்களே அதுபோல், எது நடக்க வேண்டும் எவ்விதமான அற்புதம் நிகழ வேண்டும் என அற்புதம் செய்கிறவர் கூறுகிறாரோ அது உடனடியாக நடக்கும். அப் 3:6-7 இல் அவ்விதமாகவே நடைபெறுவதை பார்க்கிறோம்.

6அப்பொழுதுபேதுரு: வெள்ளியும்பொன்னும்என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதைஉனக்குத்தருகிறேன்; நசரேயனாகியஇயேசுகிறிஸ்துவின்நாமத்தினாலேநீஎழுந்துநடஎன்றுசொல்லி, 7வலதுகையினால்அவனைப்பிடித்துத்தூக்கிவிட்டான்; உடனேஅவனுடையகால்களும்கரடுகளும்பெலன்கொண்டது.

*உடனே* அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது.  உடனே என்கிற வார்த்தையை கவனியுங்கள். பேதுரு இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லிவிட்டு போய்விட கொஞ்சம் கொஞ்சமாக ஒரு சில நாட்கள் கழித்து குணமாக வில்லை. சில மணி நேரங்கள் கழித்து கூட குணமாகவில்லை. உடனே, உடனே குணமாயிற்று. 

வேதாகமத்தின் அனைத்து அற்புதங்களும் உடனே நடந்தவைகள் தான். 

மாற்கு 1:30-31

30அங்கேசீமோனுடையமாமிஜூரமாய்க்கிடந்தாள்; உடனேஅவர்கள்அவளைக்குறித்துஅவருக்குச்சொன்னார்கள். 31அவர்கிட்டப்போய், அவள்கையைப்பிடித்து, அவளைத்தூக்கிவிட்டார்; உடனேஜூரம்அவளைவிட்டுநீங்கிற்று; அப்பொழுதுஅவள்அவர்களுக்குப்பணிவிடைசெய்தாள்.

இயேசுக்கிறிஸ்து கையைப்பிடித்து தூக்கி விட்ட *உடனே* ஜீரம் அவளை விட்டு நீங்கிற்று. 

லூக்கா 13:10-13

10ஒருஓய்வுநாளில்அவர்ஜெபஆலயத்தில்போதகம்பண்ணிக்கொண்டிருந்தார். 11அப்பொழுதுபதினெட்டுவருஷமாய்ப்பலவீனப்படுத்தும்ஆவியைக்கொண்டஒருஸ்திரீஅங்கேயிருந்தாள். அவள்எவ்வளவும்நிமிரக்கூடாதகூனியாயிருந்தாள். 12இயேசுஅவளைக்கண்டு, தம்மிடத்தில்அழைத்து: ஸ்திரீயே, உன்பலவீனத்தினின்றுவிடுதலையாக்கப்பட்டாய்என்றுசொல்லி, 13அவள்மேல்தமதுகைகளைவைத்தார்; உடனேஅவள்நிமிர்ந்து, தேவனைமகிமைப்படுத்தினாள்.

*உடனே* அவள் நிமிர்ந்து தேவனை மகிமைப்படுத்தினாள்.

வேதாகமத்தில் அற்புதங்களை வாசித்துப் பாருங்கள். இந்த *உடனே* என்கிற வார்த்தை கிட்டத்தட்ட எல்லா அற்புதத்திலும் இடம் பெற்றிருக்கும்.

வேதாகம அற்புதமானது *உடனே* நடப்பது.

*இரண்டாவதாக வேதாகம அற்புதம் முழுமையானது (Complete)*

வேதாகமத்தில் அற்புதங்கள் எதுவுமே அரைகுறை அற்புதங்கள் கிடையாது. எல்லாமே முழுமையான அற்புதங்கள். 

அப் 3:6-8 

6அப்பொழுதுபேதுரு: வெள்ளியும்பொன்னும்என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதைஉனக்குத்தருகிறேன்; நசரேயனாகியஇயேசுகிறிஸ்துவின்நாமத்தினாலேநீஎழுந்துநடஎன்றுசொல்லி, 7வலதுகையினால்அவனைப்பிடித்துத்தூக்கிவிட்டான்; உடனேஅவனுடையகால்களும்கரடுகளும்பெலன்கொண்டது. 8அவன்குதித்தெழுந்துநின்றுநடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத்துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூடதேவாலயத்திற்குள்பிரவேசித்தான்.

8ஆவது வசனத்தை மறுபடியும் வாசிப்போம். அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.

பாருங்கள் வாழ்க்கையில் இதுவரைக்கும் நடந்திராத ஒரு மனிதன். பிறக்கும்போதே ஊனமுற்றவராக பிறந்தவர். அற்புத சுகம் கிடைக்கிறது. அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.

பயன்படுத்தப்படிருக்கிற வார்த்தைகளை பாருங்கள். குதித்தெழுந்து – நின்று – நடந்தான். நடந்து – குதித்து தேவனை துதித்தான். அரைகுறையான சுகம் அல்ல. முழுமையான, மிக முழுமையான ஒரு சுகம். 

இதைப்போன்ற ஒரு அற்புதத்தை அப்போஸ்தலர் பவுலும் செய்ததை பார்க்கிறோம். 

அப் 14:8-10

8லீஸ்திராவிலேஒருவன்தன்தாயின்வயிற்றிலிருந்துபிறந்ததுமுதல்சப்பாணியாயிருந்து, ஒருபோதும்நடவாமல், கால்கள்வழங்காதவனாய்உட்கார்ந்து, 9பவுல்பேசுகிறதைக்கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப்பவுல்உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்றவிசுவாசம்அவனுக்குஉண்டென்றுகண்டு: 10நீஎழுந்துகாலூன்றிநிமிர்ந்துநில்என்றுஉரத்தசத்தத்தோடேசொன்னான். உடனேஅவன்குதித்தெழுந்துநடந்தான்.  

இங்கும் ஒரு முழுமையான சுகம். 

*மூன்றாவது வேதாகம அற்புதம் அறிவியலுக்கு/இயற்கைக்கு அப்பாற்பட்டது. (supernatural)*

வேதாகம அற்புதங்கள் அறிவியல் விளக்கங்களுக்கு அப்பாற்பட்டது. நாம் 21ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். அறிவியல் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் காலங்களில் நாம் வாழ்கிறோம். இதைவிட இன்னும் அதிகமாக அறிவியல் வளர்ச்சி வரலாம். ஆனாலும் வேதாகமத்தில் செய்யப்பட்டுள்ள அற்புதங்களை அறிவியலால் விளக்க முடியாது. 

ஊனமுற்றே பிறந்த ஒரு நபரை ஒற்றை வாக்கியத்தில் குணப்படுத்துவதை எந்த அறிவியல் கொண்டு விளக்க முடியும். இத்தனை அறிவியல் வளார்ச்சி இருந்தும், இத்தனை மருத்துவ வளார்ச்சி இருந்தும், மருத்துவத்தால் இன்றும் குணப்படுத்த முடியதவற்றை, அற்புத வரம் பெற்றவர்கள் வேதாகமத்தில் குணப்படுத்தியதை நாம் பாக்கிறோம். 

லூக்கா 5:12-13

12பின்புஅவர்ஒருபட்டணத்தில்இருக்கையில், குஷ்டரோகம்நிறைந்தஒருமனுஷன்இயேசுவைக்கண்டு, முகங்குப்புறவிழுந்து: ஆண்டவரே, உமக்குச்சித்தமானால், என்னைச்சுத்தமாக்கஉம்மாலேஆகும்என்றுஅவரைவேண்டிக்கொண்டான். 13அவர்தமதுகையைநீட்டி, அவனைத்தொட்டு: எனக்குச்சித்தமுண்டு, சுத்தமாகுஎன்றார்; உடனேகுஷ்டரோகம்அவனைவிட்டுநீங்கிற்று

குஷ்டரோகம் இப்போதும் ஒரு குணப்படுத்த முடியாத வியாதி. Chronic decease என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எவ்வளவோ மருத்துவ வளர்ச்சிகள் இப்போது இருக்கிறது. ஆனாலும் குஷ்டரோகத்தை குணப்படுத்துவதற்க்கு மருந்துகள் கிடையாது. துவக்கத்திலேயே கண்டு பிடித்து விட்டால் அதை கட்டுக்குள் வைப்பதற்க்கு, பரவிவிடாமல் தடுப்பதற்க்கு மருந்துகள் உண்டு. ஆனால் பரவிவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. 2000 வருடங்களுக்கு முன் இயேசுக்கிறிஸ்து குஷ்டரோகத்தை குணமாக்கினதை பர்க்கிறோம். 

மரித்தவர்களை உயிரோடு எழுப்பிய அற்புதம். இயேசுக்கிறிஸ்து மூன்று மரித்த நபர்களை உயிரோடு எழுப்பியது வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. லாசரு, சிறுபெண், விதவை தாயின் மகன். பேதுரு தபித்தாள் அல்லது தொற்க்காள் என்ற பெண்ணை உயிரோடு எழுப்பினார். பவுல் ஐத்திகு என்கிற ஒரு வாலிபனை உயிரோடு எழுப்பியதை பார்க்கிறோம். 

மரணத்தோடு இன்றைய அறிவியலும் மருத்துவமும் போராடிக் கொண்டிருக்கிறது. மரணத்தை ஜெயித்துவிட வேண்டும் என விஞ்ஞானிகள் எடுக்கும் முயற்ச்சிகளுக்கு அளவில்லை. ஆனால் இன்றை வரைக்கும் மரணம் என்பது அறிவியலுக்கு புரியாத புதிர். இயேசுக்கிறிஸ்துவும் அவரது அப்போஸ்தலர்களும் மரித்தவர்களை உயிரோடு எழுப்பினார்கள். இதை எந்த மருத்துவத்தைக்  கொண்டு விளக்க முடியும். 

இயேசுக்கிறிஸ்து தண்ணீரின் மேல் நடந்தார். இதை எந்த அறிவியல் கொண்டு விளக்க முடியும். 

*நான்காவது வேதாகம அற்புதங்கள் பெரும்பாலும் சிறு கட்டளை மூலம் செயல்படுத்தப்படது (Simple command)*

அப் 3:6-7

6அப்பொழுதுபேதுரு: வெள்ளியும்பொன்னும்என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதைஉனக்குத்தருகிறேன்; நசரேயனாகியஇயேசுகிறிஸ்துவின்நாமத்தினாலேநீஎழுந்துநடஎன்றுசொல்லி, 7வலதுகையினால்அவனைப்பிடித்துத்தூக்கிவிட்டான்; உடனேஅவனுடையகால்களும்கரடுகளும்பெலன்கொண்டது.  

பேதுரு…நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது.  

அற்புத வரம் பெற்றவர்கள், அற்புதம் செய்யும் சக்தியை பெற்றவர்கள் ஒரு வார்த்தை சொன்னால் போதும். அற்புதம் நடக்கும். 

மரித்துப்போன சிறு பெண்ணை இயேசுக்கிறிஸ்து உயிரொடு எழுப்பின சம்பவத்தை பார்க்கலாம். 

லூக்கா 8:54-55 

54எல்லாரையும்அவர்வெளியேபோகப்பண்ணி, அவளுடையகையைப்பிடித்து: பிள்ளையேஎழுந்திருஎன்றார். 55அப்பொழுதுஅவள்உயிர்திரும்பவந்தது; உடனேஅவள்எழுந்திருந்தாள்; அவளுக்குஆகாரங்கொடுக்கக்கட்டளையிட்டார்.

இயேசு: பிள்ளையே எழுந்திரு என்றார். அப்போது அவள் உயிர் திரும்ப வந்தது. உடனே அவள் எழுந்திருந்தாள். ஒரு சிறிய கட்டளை. பிள்ளையே எழுந்திரு. அவ்வளவுதான். மரித்துப்போயிருந்த சிறு பெண் உயிரோடு எழுந்தாள். இயேசு லாசருவை உயிரோடு எழுப்பிய சம்பவத்தில் “லாசருவே வெளியே வா” என்றார். மரித்து நான்கு நாள் ஆகி, கல்லறைக்குள் வைக்கப்பட்டிருந்த லாசரு உயிரோடு வந்ததை பார்கிரோம்.

அற்புத வரத்தை பெற்ற ஒரு நபர் ஒரு அற்புதத்தை செய்வதற்கு மணிக்கணகாக நாள்கணக்காக போராடி ஜெபிக்க வேண்டியது இல்லை. ஒற்றை வார்த்தை. அது போதும். தூரம் கூட ஒரு பிரச்சனை அல்ல.

*ஐந்தாவது இந்த அற்புதங்கள் அனைத்தும் கடவுளைக்குறித்த வெளிப்பாட்டை கொடுத்தவர்கள் மூலமாக மட்டுமே செயல்படுத்தப்பட்டது. (Revelatory Agents)* 

இறை வெளிப்பாடும் அதை பதிவு செய்தலும் எப்போதெல்லாம் நடைபெறுகிறதோ அப்போது மட்டுமே அற்புதங்கள் நடைபெற்றது. முக்கியமாக எவர் இறை வெளிபாட்டை பதிவு செய்கிறாரோ அந்த நபரே அற்புத அடையாளங்களை செய்யும் வல்லமையை கடவுளிடம் பெற்றிருப்பார். அதாவது அவர் பேசும் பதிவு செய்யும் வார்த்தை  கடவுளின் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை என்பதை உறுதி செய்வதற்க்காகத்தான் கடவுளால் அந்த வல்லமை கொடுக்கப்பட்டது. 

வேதாகம சரித்திர காலக்கோட்டை கவனித்துப் பார்ப்போமானால் எப்போதும் அற்புத அடையாளங்கள் நடந்துகொண்டே இருக்க வில்லை. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அற்புதங்கள் நடக்கும். பின்னர் வெகுகாலத்துக்கு அற்புதங்கள் நடக்காது. பின்னர் நடக்கும், நின்றுவிடும். 

நாம் அற்புத அடையாளங்கள் நடக்கும் காலகட்டங்களை கவனமாக ஆராய்ந்து பார்போமானால் ஒரு மிகச் சிறப்பான உண்மையை கண்டறியலாம். எப்போதெல்லாம் அற்புத அடையாளங்கள் நடக்குமோ அப்போதெல்லாம் கடவுள் தன்னை தன்னுடைய வார்த்தையை வெளிப்படுத்துவார். கடவுளின் மக்களுக்கு கடவுளின் அதிகாரபூர்வ வார்த்தை கிடைக்கும். அதுமட்டுமல்ல அந்த வார்த்தை பதிவு செய்யப்படும்.

வேதாகம சரித்திர காலக்கோட்டில் மூன்றே மூன்று முறைதான் இப்படி அற்புதங்கள் மனிதர்களால் செய்யப்பட்டது. முதலாவது மோசே மற்றும் யோசுவாவின் காலகட்டம். ஏசாயா எரேமியாவின் காலகட்டம். இயேசுக்கிறிஸ்து அப்போஸ்தலர்கள் காலகட்டம். வேதாகமத்தின் பெரும்பகுதி இவர்கள் காலகட்டத்தில் தான் எழுதப்பட்டது. 

புதிய ஏற்பாட்டில் நாம் பார்க்கும் போது வார்த்தையானவராம் இயேசுக்கிறிஸ்து, கிறிஸ்துவின் நேரடி அப்போஸ்தலர்கள் தவிர பெரும்பாலும் மற்றவர்கள் யாரும் அற்புதம் செய்யவில்லை. ஸ்தேவான் போன்ற ஒன்று இரண்டு பேர், அப்போஸ்தலர்களோடு மிக நெருக்கமாக இருந்தவர்கள் செய்திருக்கிறார்கள். ஸ்தேவானின் பிரசங்கம் மிக சிறப்பானது. வேதாகமத்தின் முழு சரித்திர பின்னணியில் அவர் நற்செய்தியை பிரசிங்கித்த போது அதை பொறுத்துக்கொள்ள முடியாத யூதர்கள் ஸ்தேவானை கல்லெறிந்து கொன்றனர். அற்புதங்களை செய்யும் வரம் பெற்றிருந்த பேதுரு ஸ்தேவானை உயிரோடு எழுப்ப வரவில்லை. அது கடவுளின் விருப்பமும் இல்லை. 

நாம் அப்போஸ்தலர் நடபடிகளை வாசிக்கும்போது கூட பின்னால் போக போக அற்புத அடையாளங்கள் குறைந்துகொண்டே வந்து போதனைகள் அதிகரிப்பதை நாம் காணமுடியும். 

*ஆறாவது இந்த அற்புதங்கள் அனைத்தும் பொதுவெளியில் செய்யப்பட்டது (Public).*

வேதாகமத்தில் இவ்விதமாக அற்புதங்களை செய்யும் வல்லமை பெற்ற எவரும் ரகசியமாக அற்புதங்களை செய்யவில்லை. அற்புதங்கள் அனைத்தையும் பொதுவெளியிலேயே செய்தார்கள். பல்வேறு மக்கள் முன்னிலையில் நேரடியாக அற்புதங்கள் செய்யப்பட்டது. அந்த மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அற்புதங்கள் செய்யப்படது. நாம் வாசிக்கக் கேட்ட அப் 3ஆவது அதிகாரத்தில் கூட பேதுரு பொது வெளியில், பல்வேறு மக்கள் கவனித்துக்கொண்டிருந்த நிலையில் பிறவி ஊனமுற்றவரை குணமாக்குகிறார். நாம் தொடர்ந்து வாசிப்போமானால், யூத மதத் தலைவர்கள் பேதுருவையும் யோவானையும் தண்டிக்க நினைப்பதையும், பொது வெளியில் மக்கள் முன்னிலையில், அற்புதம் நடைபெற்றிருப்பதாலும், அவர்கள் பார்க்க பல வருடங்கள் கோவிலின் முன் நடக்க இயலாதவராக பிச்சை கேட்டுகொண்டிருந்த நபர் இப்போது அவர்களின் கண்முன் நடந்து வருவதை பார்ப்பதினால் ஒன்றும் செய்யமுடியாமல் தவிப்பதையும் நம்மால் வாசிக்க முடியும். 

இன்னைக்கு எதெல்லாம் மறைமுகமா செய்யணுமோ அத்தனையும் வீடியோ எடுத்து போட்டுர்றாங்க. நம்ம ரகசியம்னு நெனைக்குற அனைத்தும் வீடியோவா இருக்கு. ஆனா நான் மேலே சொன்ன வேதாகமம் சொல்கிற அடைப்படையில ஒரு அற்புதம், ஒண்ணு, ஒண்ணே ஒண்ணு வீடியோ காட்டுங்க பாப்பம். 

அப்படியானால் கடவுள் இப்போது அற்புதங்கள் செய்வதில்லையா? கடவுள் அற்புதம் செய்யும் சக்தியை இழந்து விட்டாரா?

கடவுள் அற்புதம் செய்யும் சக்தியை இழந்துவிட வில்லை. அவர் விருப்பப்பட்டால் எப்போது வேண்டுமானாலும் அற்புதம் செய்வார். ஆனால் ஒரு மனிதன் தனக்கு அற்புதம் செய்யும் சக்தி இருக்கிறது என்று சொல்லி வருவாரானால் அவர் மேலே வேதாகமம் காட்டும் விதத்தில் அற்புதம் செய்யவேண்டும். அப்போது மட்டுமே அவருக்கு அற்புதம் செய்யும் வல்லமையை கடவுள் கொடுத்திருக்கிறார் என்கிற முடிவுக்கு நாம் வர வேண்டும். வெறும் தலைவலி காய்ச்சல் போன்ற குணப்பட முடிந்த வியாதிகளை மட்டும் குணப்படுத்துவதாக சொல்லி அற்புதம் செய்யும் வரத்தை கடவுள் தனக்கு கொடுத்துவிட்டார் என (claim) சொல்லக்கூடாது.

 தயவு செய்து தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். நான் இங்கே கடவுளை ஒரு பெட்டிக்குள் போட வில்லை. வத வசனத்தின் அடிப்படையில் மனிதர்களை கட்டுப்படுத்துகிறேன். 

நேரடியாக கடவுளை நோக்கி ஜெபியுங்கள். உங்களுக்கு துன்பம் வியாதி வந்தால் வேதாகமம் சொல்வது போல உங்கள் திருச்சபை மூப்பர்களை அழைத்து ஜெபிக்கச் சொல்லுங்கள். உங்களையும் நேசிக்கும் நமது அன்பு ஆண்டவர் கேட்பார். உங்கள் ஜெபத்துக்கு பதிலளிப்பார். உங்கள் விசுவாசமும் விருத்தியடையும். 

வேதாகமத்தை கவனமாக வாசிப்போம். வேதாகமத்தை கருத்தாய் கற்றுக்கொள்வோம். கடவுளின் பெயரைச் சொல்லி வஞ்சிக்கும், போலி அற்புதங்கள் மூலம்  மக்களை ஏமாற்றும் ஏமாற்றுப் பேர்வளிகளிடம் இருந்து நம்மை காத்துக்கொள்வோம்.

எனக்கன்பான விசுவாச ஜனமே எச்சரிக்கை. போலிகளைக்கண்டு ஏமாறாதீர்கள். 

Leave a Reply