இரும்பை இரும்பு…

இரும்பை இரும்பு…

கூராக, அபாயகரமாக எதாவது இரும்பு முனைகள் (அல்லது பிளாஸ்டிக், மரம்) சில இடங்களில் நீட்டிக்கொண்டு இருக்கும். கவனிக்காமல் விட்டோமானால், இப்போது இல்லாவிட்டால் ஒரு நேரம் ‘சரக்’கென்று அது இரத்தம் கேட்பது உறுதி.எனவே, ஒரு நல்ல அரம் (அரம்போலுங் கூர்மைய ரேனும் என்று வள்ளுவர் கூடச் சொல்லியிருக்கிறார்) இருப்பின் அதைக் கொண்டு உடனடியாக அந்தப் பகுதியைத் தேய்த்து முனை மழுங்கப்பண்ணிவிடுவது நல்லது.

வீட்டில் நல்ல அரம் (ஆங்கிலத்தில் Iron file அல்லது Rasp) ஒன்று எப்போதும் என்னிடம் இருக்கும். அதைவைத்துக் கத்தியைக் கூட அவசரத்துக்குத் தீட்டிவிடலாம். இரம்பம் என்றால் அதை அடிக்கடி இந்த அரம்கொண்டுதான் தீட்டவேண்டும். அதற்காக இரம்பம் மட்டமானது, அரம் உயர்வானது என்றல்ல. அந்த அரத்தைக்கூட வேறு ஒரு சிறு இரும்புக் கம்பி ஒன்றை வைத்து மீண்டும் தேய்ந்த பகுதிகளை வெளிக்கொண்டுவிடலாம். அரம் உபயோகித்தவர்களுக்கு எளிதில் விளங்கும்.தேய்க்கப்படும் பொருள் அல்லது கூர்மையாக்கப்படும் பொருள் இரும்பால் ஆனது என்றால் அதைச் சீரமைக்கவும் கூர்மையாக்கவும் அபாயம் தணிக்கவும் – என்று எதையும் செய்ய இரும்பாலான ஒரு அரம்தான் தேவைப்படும். நன்றாகப் பழுக்கக்காய்ச்சிய இரும்பை கொல்லர்கள் பட்டறையில் அடித்து பின்னி எடுப்பதும் இரும்புச் சுத்தி கொண்டுதான். நல்ல இரும்புக் கத்தி, அரிவாள், உளிக்கு இரும்பில்தான் இரும்பை அடி நகர்த்தியாக வேண்டும்.

இதைத்தான் இரும்பை இரும்புதான் கருக்கிடும் என்றார் வேதஞானி. இரும்பிலான அரத்தைப் பிறரைச் சீர்படுத்த உதவுபவர்களோடு இணைக்கிறார். இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேதிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான். நீதிமொழிகள் 27:17. இந்த வசனத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் பவர் ஆயர், சரியாக ஒரு வார்த்தையைச் சேர்த்தார். “சிநேதிதனுடைய முகத்தை” என்று! ஆங்கில வேதங்களில் இல்லை. மூலத்தில் இருக்கிறதா தெரியவில்லை. ஒருமனிதனை இன்னொரு மனிதன் கருக்கிடுவான் – சீர்படுத்துவான் – என்பது சரியான மொழிபெயர்ப்பே என்றால், நண்பனை நண்பன் சீர் செய்வான் என்கிற மொழிபெயர்ப்பு மிகவும் அம்சமாகப்படுகிறது. சிநேதிதனுடைய முகத்தை என்றால் சோர்வான, அதைரியப்பட்ட அல்லது வேதனையைக் காட்டும் சிநேதிதனுடைய முகத்தை இன்னொரு சிநேகிதன் தேவ வார்த்தையால் கருக்கிட்டுவிடலாம் என்று பொருள்!

.ஆவிக்குரிய நண்பர்களை…கிறிஸ்துவுக்குள் வளரவேண்டுமானால், அதற்கு ஒரு இனிமையான வழி உண்டு. தேடிப் பேசி, கண்டறிந்து நல்ல ஆவிக்குரிய நண்பர்களை ஏற்படுத்தி அல்லது இணைத்துக் கொள்ளுவதுதான் அந்த வழி. இயல்பில் இன்றோவர்ட்களாக (Introverts) – அதாவது அதிகம் மற்றவர்களுடன் எளிதில் சென்று பேசும் சகஜமானவர்களாக இல்லாத பட்சத்தில் இது சற்றுக் கடினமான ஒன்றாகத் தெரியலாம். ‘சரியான வெயிலா இருக்கே…’, ‘AKS போயிட்டானா’, என்று பஸ் ஸ்டாப்பில் கூட சிநேகிதம் பிடிக்கிறவர்களுக்கு இது பெரிய விஷயமில்லை. ஆனால், சிலருக்கு இப்படி நட்பு பிடிப்பதுதெல்லாம் ஒவ்வாதது! இயல்பிலேயே எளிதில் பேசிப்பழகிவிடத் தயக்கம் காட்டுபவர்கள்.என்றாலும், கிறிஸ்துவுக்குள் இருப்பவர்கள் (அல்லது நுழைந்தவர்கள்) அப்படியே இருந்துவிட வேண்டிய அவசியமில்லை. பெரிய ‘மூடு’க்காராக இருந்தாலும் அதில் தளர்வு புதுமனுஷனில் உண்டாகும். கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடலாம்.

ஓரேயடியாக எக்ஸ்றோவர்டுகளாக (Extroverts) மாறிவிடாவிட்டாலும் நல்ல வளர்ந்த, வேதம் அறிந்த நண்பர்களை உண்டாக்கிக்கொள்ள ஆவியானவர் துணையால் செய்ய முடியும். ஜெபித்தால் கிடைப்பர்! இந்த முகநூல் காலத்தில் ஆவிக்குறிய சினேகிதரைச் சம்பாதிப்பது பெரியவிஷயமல்ல. நான் செய்திருக்கிறேன். யார் அந்த அரம்? அப்படி நீங்கள் கூடும்போது இயேசுவை மட்டும் பேசினால், அவர்களே உங்கள் ஆவிக்குறிய நண்பர்கள். அவர்களே ஏற்ற சமயத்தில் உங்களைக் கூராக்கவோ, தேவைப்படும் இடத்தில் மழுங்கப் பண்ணவோ கூடச் செய்வர். எது ஆவிக்குரிய நட்பு? உங்கள் கூடுகையில் இயேசுவின் நாமம் மட்டும் உயர்த்தப்படுமென்றால் அதுவே உங்கள் ஆவிக்குறிய நட்புறவு! அங்கு வெட்டி அரட்டை, புறணி, வீண்பேச்சு இராது.

நீங்கள் ஆவிக்குரிய நண்பராக முடியுமா?. ஆம், ‘இயேசுவை சிந்திப்பது எப்படி’, என இப்போது சிந்திக்கிறீர்கள் என்றால் நீங்களும் மற்றவருக்கு ஆவிக்குரிய நண்பராகத் தகுதி உடையவரே! நம்முள் வாழும் பரிசுத்த ஆவியானவர் நமக்குப் போதிக்க வல்லவர். கண்டித்தும் உண்ர்த்துபவர். என்றாலும், நாம் எல்லா நேரங்களில் அவர் குரல் கேட்டு நடப்பதில்லை. ஆனால், அப்படிப்பட்ட நேரங்களில் அவர் ஆவியானவரால் நடத்தப்படும் நண்பர்கள் மூலமாக பேசுவார் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு ஆவிக்குரிய நட்பு, நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. உங்கள் ஆவியும், நண்பர்(களின்) ஆவியும், பரிசுத்த ஆவியின் உதவியுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

இதுவும் முப்புரினூல்தான். நிறைவு ஜெபத்தில் போதகர்கள் சொல்கிறார்களே!, அந்தப் “ பரிசுத்த ஆவியின் அன்னியோன்ய ஐக்கியம்” – அது நமக்குள் இருக்கும். அப்போது வேத வசனங்களை அடிக்கடிக் குறிப்பிடவோ, இல்லையென்றால் வேதத்தைப் புரட்டிக் கொஞ்சமாக ஞாபகத்தில் வருபவற்றை உறுதியாக்கிக் கொண்டு பேசுவீர்கள். வெறுமனே உலக ஆசிர்வாதங்களைப் பற்றிய பேச்சோ அதற்கான ஜெபங்களோ மிகவும் குறைந்து அல்லது இல்லாமல் காணப்படும். நீங்கள் கண்டறிந்த வேத அறிவைப் பகிர, சந்தேகங்களைப் போக்க என்று அந்த சந்திப்புகளின் தன்மையே வேறு.

இந்த நாட்களிலில் பலர் Zoom, Google Meet எல்லாம் பயன்படுத்தி இணைகின்றனர். வேத ஆராய்ச்சிகள் விளக்கங்கள் எல்லாம் கூட ஆன்லைனிலேயே நடக்கின்றன.இப்படியெல்லாம் இல்லையென்றால், அவை நிச்சயம் ஆவிக்குரிய சந்திப்புகள் இல்லை. வேறு பேச்சுக்கள் மட்டுமே நிரம்பி இருந்தால், அந்தக் குழுவே ஆவிக்குரிய நட்புவட்டம் அல்ல. வெறுமனே கிறிஸ்தவ நண்பர்கள் கிளப் அது. கிறிஸ்துவின் நண்பர்கள் கூட்டம் அல்ல! இப்படி ஒன்று அமையப் பெற்றிருந்தால் நீங்கள் பாக்கியவான்கள். தடுமாற்றமற்ற ஆவிக்குரிய வாழ்வுக்கு, அத்தகைய நண்பர்களே அவசியம்.

நினைவில் கொள்ளுங்கள்: இந்த வட்டத்தை நீங்களாக உருவாக்க இயலாது. ஆனால், வாஞ்சையும் நோக்கமும் இருந்தால், தேவனே உதவுவார். ஆவிக்குள் ஒருமனப்பாடு அமைந்த குழுவாக அது இருக்கும். ஈகோ இல்லாத அன்பின் நட்பு அது. விட்டுக்கொடுக்கும். தட்டிக்கேட்கும். மதிக்கும். சிரிக்கும். அழும். ஜெபிக்கும். ஆலோசனை இல்லாத இடத்தில் சீர்கேடு இருக்கும். இவருக்கெல்லாம் நாம் புத்திமதி சொல்ல இயலுமா என்கிற இடத்தில் இருந்தால் அதுவே சரியில்லாத பரிதாப வகை நிலைதான். ஆனால், கேட்கும் இருதயமும், பேசும் நண்பர்களும் அந்தக் குறையைப் போக்கமுடியும். இரும்பு பிரயோஜனமில்லாமல் துருப்பிடிப்பதை அரம் பார்த்துக்கொண்டிருக்காது. நண்பர்களை கிறிஸ்துவுக்குள் வளரவும், சீர்பொருந்தப் பண்ணவும், சத்தியம் பிசகாமல் நடக்கச் செய்யவும், ஆலோசனை பெறவும் நல்ல அரம் போன்ற நண்பர்கள் தேவை. ஒருவருக்கொருவர் அரமாக இருக்கலாம். இணைந்து முன்னேறலாம். கிறிஸ்தவ வாழ்க்கையே முன்னேறிச் சென்றுகொண்டே இருக்கும் வாழ்க்கைதானே.

Leave a Reply