கிறிஸ்தவமும் உபதேசப் பிரிவுகளும்

கிறிஸ்தவமும் உபதேசப் பிரிவுகளும்

முதல் நூற்றாண்டு முதற்கொண்டு, கிறிஸ்தவர்களை நோக்கி வீசப்படும் அஸ்திரங்களில் ஒன்று, “ஒரே வேதம், ஒரே கடவுள் என்கிறீர்கள், பின்பு ஏன் உங்களுக்குள் இத்தனை உபதேச பிரிவுகள்?” என்ற கேள்வி தான். இதைக் குறித்த தெளிவான புரிதல் இல்லாத காரணத்தால், கிறிஸ்தவர்களே சங்கடத்தில் நெளியும் நிலையும் காணப்படுகிறது.

ஒருசிலர் இதிலிருந்து தற்காலிகமாகத் தப்பிக்க, “நான் non-denominational பிரதர்” என்றும் கூறிக்கொள்வதும் உண்டு. இப்படிக் கூறுகிறவர்களின் நம்பிக்கைகளைச் சற்று விவரிக்கக் கேட்டால், அதுவும் இன்றிருக்கும் ஏதோ ஒரு denomination’ஐ சார்ந்ததாகவே இருக்கும் என்பது தனிக்கதை. வேறுசிலருக்கு அதுவே, “ஐயகோ கிறிஸ்தவத்தில் எப்போது தான் உபதேசப் பிரிவுகள் ஒழியுமோ”, என்ற புலம்பலாக வெளிப்படுகிறது!

மேலோட்டமாகப் பார்க்கும் போது, கிறிஸ்தவர்களின் இந்த அங்கலாய்ப்பு நியாயமாகத் தோன்றினாலும், சற்று ஆராய்ந்து பார்த்தால் அது எத்தனை அர்த்தமற்றது என்பது புரியவரும். இப்படி அங்கலாய்ப்பவர்களை இருவகையாகப் பிரிக்க முடியும்:

1) சத்தியத்தைத் தேடத் துவங்கி, அதில் இருக்கும் பிரிவுகளைக் கண்டு கலக்கமடைந்து, ஏக்கப் பெருமூச்சு விடும் ஒரு கூட்டம்.

2) பாதியிலேயே தங்கள் தேடலை நிறுத்திவிட்டு, தாங்களே முற்றிலும் தேறினவர்கள் என்ற பிரம்மையில், ஒருவித மேட்டிமையுடன் சலித்துக்கொள்ளும் இன்னொரு கூட்டம்.

இதில் முன்னது ஆரோக்கியமானது, வளரச் செய்யும்; பின்னது ஆபத்தானது, இவர்கள் தான் பிரிவினைக்குக் காரணர்கள். பரிசுத்த ஆவியானவர் சகல சத்தியத்துக்குள்ளும் நம்மை நடத்துவார் என்றவுடன், நாம் வேதாகமத்தைத் திறந்து படிக்கத் துவங்கியதும், பரிசுத்த ஆவியானவர் ஒரு கணக்கு வாத்தியாரைப் போல, ஃபார்முலாவை வைத்து இது தான் சரி/தவறு என்று ‘ஒரே மூச்சாக’ மண்டைக்குள் இறக்கிவிடுவார் என்றும், அதை மனப்பாடம் செய்தவுடன், தடாலடியாக ‘ஒரே இரவில்’ ஆன்மீகப் புலிகள் ஆகிவிடலாம் என்றும் நினைத்துக்கொண்டால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

உண்மை இதற்கு நேர்மாறானது என்பதை, சற்று முதிர்ந்த அனுபவம் உள்ளவர்கள் ஒப்புக்கொள்வார்கள். சத்தியத்துக்குள் நடத்துவார் என்றால், முன்னே சத்தியம் இல்லாதவர்களாக, பிழையான பிம்பங்களுடன், வழி தெரியாமல் அலைந்து கொண்டிருந்த நம்மை, அந்நிலையில் இருந்து மீட்டு, படிப்படியாகப் பிழை இன்னதென்று உணர்த்தி, தவறான புரிதல்களைக் களைந்து, சரியான பாதைக்குள் நடத்துவார் என்று அர்த்தம். இந்தப் பாதையைக் கடக்கும் போது, சில முட்புதர்களையும், காட்டருவிகளையும், பாலை நிலங்களையும், சில சோலைகளையும் கடந்தாக வேண்டுமென்பது நியதி.

இப்படித் தான், “யாராவது என்னைக் காப்பாற்றினால் நன்றாக இருக்குமே” என்று தத்தளித்துக் கொண்டிருப்பவரின் கரத்தைக் கடவுள் கிருபையாகப் பிடித்துத் தூக்கிவிடுவதில் துவங்கும் கிறிஸ்தவம் — பின்பு ஆர்வமிகுதியில், தன்னை மீட்ட கிருபையை, கடவுளின் ஒத்தாசையை மறந்துவிட்டு, “இரண்டில் ஒன்று பார்த்துவிடுகிறேன், நீங்கள் ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை மட்டும் பாருங்கள்” என்று முஷ்டியை மடக்கிகொண்டு கிளம்பி, மாம்ச பெலத்தால் முயன்று, மீண்டும் நியாயப்பிரமாண வலையில் சிக்கித் தோற்பதும் — பின்னர் நினைவு திரும்பி, கடவுளின் கிருபையால் மட்டுமே நிலைத்திருக்கவும் முடியும் என்ற உண்மையைப் புரிந்துகொள்வதும் – பின்பு கிருபையின் கிரக்கத்தில், சரீரத்தை அடக்கி ஒடுக்கிக் கீழ்ப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணராமல் இஷ்டம் போல் அலைவதும்; இதனிடையே, பட்ட காயங்களுக்கு இதமாக ஆசீர்வாதம், வாக்குத்தத்தம், அற்புதம், ஆட்டம்பாட்டம் என்று அலைந்து திரிவதும் — பின்பு கடவுளின் சித்தம் என்ன, எதற்காக அழைக்கப்பட்டோம் என்பதைப் புரிந்துகொண்டு சீர்பொருந்துவதும் — பின்னர் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றம்/முன்னேற்றம் இல்லாததைக் கண்டு நம்பிக்கையிழந்து, மாற்றுப் பாதைகளில் அலைந்து திரிந்து, மீண்டும் கடவுளின் கிருபையால் சரியான பாதைக்கு நேராக நடத்திச் செல்லப்படுவதும் – முழுமையான அர்ப்பணிப்புக்குப் பின்னர், கனிதரும் வாழ்க்கையை அனுபவிக்கத் துவங்குவதும், முதிர்ச்சியடைவதும், பிறருக்காக வாழ்வதுமாக, பாதை நீண்டு கொண்டே போகும்.

இது தான் பரிசுத்த ஆவியானவர் நம்மைச் சத்தியத்துக்குள் நடத்தும் விதம். இப்படி ஒவ்வொரு நிலையையும் கடக்கும் போதெல்லாம், ஒரு ஆனந்த திருப்தி ஏற்படுவது இயல்பு. ஆனால் அந்தந்த இடங்களில் கிடைக்கும் தற்காலிக திருப்தியில் மயங்கி, ‘அடைந்தாயிற்று’ என்றெண்ணி, தன்னையொத்த ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு, அங்காங்கே கூடாரம் போட்டு நிரந்தரமாகக் குடியேறும் போதுதான், பிரிவுகளும் பின்னடைவுகளும் ஏற்படத் துவங்குகின்றன. குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்து உணர்ந்துகொள்ள முயற்சித்த கதையைப் போன்றது தான் இதுவும்.

இன்று நம்மிடையே காணப்படும் பல்வேறு உபதேசங்களைச் சற்று உற்று நோக்கினால், அவற்றின் ஊடே நாம் ஏற்கனவே கடந்து வந்திருப்பதையும், அதில் ‘குறிப்பிட்ட அளவு’ உண்மை இருப்பதையும், அவர்களை நடத்திவந்ததும் பரிசுத்த ஆவியானவராகத் தான் இருக்க முடியும் என்பதையும் முதிர்ந்த அனுபவமுள்ளவர்களால் புரிந்துகொள்ள முடியும்.

இன்று காணப்படும் உபதேசப்பிரிவுகளை முறையே வகைப்படுத்தி வரிசைப்படுத்தினால், அது ¼ உபதேசம், ½ உபதேசம், ¾ உபதேசம்… என்ற வரிசையில் இருப்பதைக் காண முடியும். அதாவது, ஒவ்வொரு பிரிவினரும், மற்ற எல்லாரையும் போலவே தங்கள் பயணத்தைத் துவங்கி, இடையிடையே ஒவ்வொரு இடத்தில் கூடாரம் அமைத்து செட்டில் ஆகியிருப்பதைக் காணலாம். அக்மார்க் வேதப்புரட்டு என்று நாம் கருதும் உபதேசங்கள் கூட, நம்முடைய சிந்தனையில் தோன்றி மறைந்த ஒன்றாகவே இருந்திருக்க அதிக வாய்ப்புண்டு.

இதைத் தான் பவுல் பின்வரும் வசனங்களில் அழகாக எழுதுகிறார்,”நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்.” பிலி 3:12. “ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை.” 1 கொரி 8:2. “இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.” 1 கொரி 13:12.

இப்படி, கடந்து வந்த பாதைகள் எல்லாம் முள்ளும் குறுக்குமாகக் காட்சியளித்தாலும், அவற்றின் ஊடே நடத்தி வந்தவர் பரிசுத்த ஆவியானவர் தான். அவர் நம்மைச் சத்தியத்துக்கு நேராகத் தான் நடத்தி வந்திருக்கிறார். அவரின் வழிகாட்டுதல் இல்லாமல், தற்போதைய நிலையை அடைந்திருக்க முடியாது. அதுபோல, இனி நடக்க வேண்டிய பாதையில் நடத்தப் போவதும் அவர் தான்.

இங்கே பிரச்சனைக்குரியது புரிதலில் உள்ள வேறுபாடுகள் அல்ல, அது தவிர்க்க முடியாதது. காரணம், வளர்ச்சியில் எல்லாரும் ஒரே அளவில் இருப்பதில்லை. அவரவர் வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களின் உபதேசப் புரிதலும் இருக்கும். தேறிய ஒருவரின் பாதத்தில் அமர்ந்து கற்றுக் கொள்வதாக இருந்தாலும், அவர்கள் கடந்து வந்த குழப்பத்தின்/பாடுகளின் பாதையைக் கடக்காமல், அவர்கள் அடைந்த முதிர்ச்சியை அடைய முடியாது. நாம் வளர்ந்து குறிப்பிட்ட நிலையை எட்டியவுடன், பின்தங்கி இருப்பவர்கள் என்னவோ பாதாளத்தில் கிடப்பதாக நாமாக அனுமானிக்கக் கூடாது. அவர்களையும் நடத்திக் கொண்டு வருகிறவர் பரிசுத்த ஆவியானவரே; அடையக் காத்திருக்கும் இலக்கு அனைவருக்கும் ஒன்றே.

அதனால், “ஐயகோ! ஏன் இந்த உபதேசப் பிரிவுகள்” என்று அங்கலாய்த்துக் கொண்டிருக்காமல், நமக்கு நியமிக்கப்பட்ட பாதையில், தொடர்ந்து இலக்கை நோக்கித் நடந்து கொண்டே இருப்பது உத்தமம். அனைவரும் வெவ்வேறு உபதேசப் படிநிலைகளைக் கடந்து தான் இப்போதிருக்கும் நிலையை அடைந்திருக்கிறோம் என்பதை மறவாமல், ஆதாயத்துக்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும் பாதி வழியில் கூடாரம் அமைத்து உட்கார்ந்திருப்பவர்களை அடையாளம் கண்டு எச்சரிக்கையாக விலகி, விழுந்தவர்களைத் தூக்கிவிட்டு, பின்தங்கியிருப்பவர்களை சகல சாந்தத்தோடும் அறிவுறுத்தி, உடன் நடப்பவர்களின் கரம் கோர்த்து நடக்கக் கற்றுக்கொள்வது தான் நமக்கு நியமிக்கப்பட்ட ஒன்று.

மற்றபடி, இயேசு கிறிஸ்துவின் தெய்வத்தன்மையை மறுதலிக்கும், கிறிஸ்தவத்துக்கும் இரட்சிப்புக்கும் துளியும் தொடர்பில்லாத உபதேசக் குப்பைகளுடன் நமக்கு எந்த ஐக்கியமும் கிடையாது. அவர்களுக்குத் தேவை சுவிசேஷமே!

Leave a Reply