உலக வரலாற்றில் பல்வேறு அடிமைத்தனங்களுக்கு எதிராக போராடி உயிரைக் கொடுத்த புரட்சிக்காரர்கள் பலர் தோன்றியதுண்டு. ஆனால் மனிதனின் நிரந்தர அடிமைத்தனத்துக்கு காரணியான பாவத்தின் மென்னியை முறித்து பாவியை விடுதலையாக்கின நம் இயேசுவைப் போன்றதொரு புரட்சிக்காரர் இதுவரை வரலாற்றில் தோன்றியதுமில்லை பல கோடி ஆண்டுகளானாலும் இனி தோன்றப்போவதுமில்லை.
தம் உயர்வை விட்டு கீழிறங்கி மக்களோடு மக்களாக வாழ்ந்து சேவை செய்த தலைவர்கள் பலர் உண்டு, ஆனால் ஆராதனைக்குரிய தேவகுமாரனாய் இருந்தும் தம்மைத்தாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து சீடர்கள் பாதங்களை கழுவி, சிநேகிதருக்காக கொடூர மரணமாய் ஜீவனை விட்ட நம் இயேசுவைப் போன்றதொரு உன்னதத் தலைவர் இதுவரை தோன்றியதுமில்லை இனி தோன்றப்போவதுமில்லை.
மாபெரும் மருத்துவ சாதனைகளை செய்து நோபல் பரிசுகளை அள்ளிய மருத்துவர் வரலாற்றில் பலருண்டு, ஆனால் யாராலும் குணமாக்க முடியாத, தேவனை விட்டு மனிதனை நிரந்தரமாக பிரிக்கும் பாவம் என்னும் கொடூர ஆன்மீக வியாதிக்கு தன் இரத்தத்தையே மருந்தாகத் தந்த இயேசுவைப் போன்றதொரு ஆன்மீக மருத்துவர் இதுவரை தோன்றியதுமில்லை இனி தோன்றப்போவதுமில்லை.
பேதைகளை புறந்தள்ளி அறிவாளிகளுக்கு அறிவை போதித்து அவர்களை ஒளிரவைத்த அரிஸ்டாட்டில் போன்ற ஆசிரியர்கள் பலர் பூமியில் தோன்றியதுண்டு, ஆனால் ஞானிகளை புறந்தள்ளி மீன்பிடிக்கும் பேதைகளுக்கு அறிவை போதித்து அவர்களைக் கொண்டு உலகை கலக்கிய நம் இயேசுவைப் போன்றதொரு பேராசிரியர் இதுவரை தோன்றியதுமில்லை இனி தோன்றப்போவதுமில்லை.
தீயவருக்கு நன்மை செய்த நல்லவர்கள் இந்த பூமியில் பலர் வாழ்ந்ததுண்டு, ஆனால் தனக்கு சத்துருவாய் மாறிப்போனவர்களின் மீட்புக்காக தம் ஜீவனைக் கொடுக்கவே மனிதனாகப் பிறந்து, அவர்கள் தம்மை ஏற்றுக்கொள்ளாத போதும், கொடூரமாய் துன்புறுத்தியபோதும் தயவாக மன்னித்து அவர்களுக்காக ஜெபிக்கவும் செய்த இறைமகன் இயேசுவைப் போன்றதொரு நல்லவர் இந்த பூமியில் இதுவரை தோன்றியதுமில்லை இனி தோன்றப்போவதுமில்லை.
உத்தமர் என்று அழைக்கப்படுவோர் பலர் வரலாற்றில் வந்துபோனதுண்டு, ஆனால் குறை கண்டுபிடிப்போர் எப்போதும் அவரை சூழ்ந்திருந்த போதும் என்னில் பாவம் உண்டு என்று உங்களில் யார் என்னை குற்றப்படுத்தக்கூடும் என்று அவர்களை நோக்கி சவால்விட்டு வென்று காட்டியதுமன்றி, பழுதற்ற ஆட்டுக்குட்டியாக பிதாவாலேயே அங்கீகரிக்கபட்ட நம் இயேசு போன்றதொரு களங்கமற்ற உத்தமர் இதுவரை தோன்றியதுமில்லை இனி தோன்றப்போவதுமில்லை.
மனிதர் மத்தியில் மேன்மைக்குரியோராய் வாழ்ந்து மரித்த பலருண்டு, ஆனால் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோர் யாவருடைய முழங்காலும் முடங்கும் மா உன்னத அதிபதியாக இந்த பூமியில் கால்வைத்தவர் நம் இயேசு மட்டுமே. அவரைப்போல மேன்மைக்குரியவர் இதுவரை பூமிக்கு வந்ததில்லை கோடி ஆண்டுகளானாலும் இனி வரப்போவதுமில்லை.
அறிவியல் வல்லமைகொண்டு இயற்கையின் சக்தியோடு போராடி தோற்ற பலருண்டு, ஆனால் இயற்கையை தன் விரலசைவில் அடக்கி வைத்திருந்த சர்வவல்லவர் நம் இயேசு மாத்திரமே! அவரைப் போன்றதொரு வல்லவர் இதுவரை பூமிக்கு வந்ததில்லை கோடி ஆண்டுகளானாலும் இனி வரப்போவதுமில்லை.
உம்மைப்போல் யாருண்டு எந்தன் இயேசுநாதா… இந்தப் பார்தலத்தில் உம்மைப்போல் யாருண்டு!