கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின
இயேசுக்கிறிஸ்து யார்? அவர் எதற்காக இந்த உலகத்திற்கு வந்தார்? என்பதை வேதாகமத்தின் அடிப்படையில் பார்க்கலாம்.
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் (லூக்கா 5:32).
கடவுள் மனிதரை செம்மையாகப் படைத்தார். ஆனாலும் அவர்களை பொம்மைகளாக படைக்கவில்லை. அதாவது விசை கொடுத்தால் இயங்கும் ஒரு பொம்மையை போலவோ சொன்னதை எல்லாம் அப்படியே நிறைவேற்றும் இயந்திர மனிதனைப் போலவோ படைக்கவில்லை. மனிதனை கடவுள் தனது சாயலில் படைத்திருந்த படியினால் அவர்கள் சுய அறிவுள்ளவர்களாகவும் அந்த அறிவை பயன்படுத்தி தெரிந்தெடுக்கும் ஆற்றல் உள்ளவர்களாகவும் இருந்தனர். எனினும் ஆதாமும் ஏவாளும் கடவுளின் வார்த்தையை நம்பி அவர் சொன்ன நன்மை தீமை அறியக்கூடிய மரத்தின் கனியை உண்ணாமல் இருப்பதற்கு பதில், “சாகவே சாவீர்கள்” எனும் கடவுளின் எச்சரிப்பை புறக்கணித்து கடவுளின் வார்த்தையை நம்பாமல் பாவத்தில் விழுந்தபோது, ஆதாம் ஏவாள் மட்டும் அல்ல, அவர்கள் மூலமாக இந்த உலகத்தில் உருவாகப்போகிற முழு மனுக்குலமும் பாவத்திற்கு உட்பட்டு பிசாசுக்கு அடிமைகளாக மாறியது. ஆம், இனி உலகத்தில் பிறக்கப்போகும் எல்லா மனிதரும் பாவிகளாக, பிசாசுக்கு அடிமைகளாகவே பிறப்பார்கள்.
அவர்கள் பாவம் செய்ததினால் இனி உலகத்தில் ஏற்படப்போகும் விளைவுகளை குறித்து சொல்லிக்கொண்டு வந்த கடவுள், சாத்தானிடம் பேசும்போது பெண்ணிடம் இருந்து பிறக்கப்போகும் ஒரு ஆண், பெண்ணின் வித்து ஒரு நாள் பாம்பின் தலையை நசுக்குவார் என்று சொன்னார் (ஆதி. 3:15). நாம் வேதாகமத்தை தொடர்ந்து வாசிப்போமானால் அந்த குறிப்பிட்ட நபர், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யூதா, மற்றும் தாவீதின் வழிமரபில் பிறக்கிற ஒருவராக இருப்பார். அந்த நபர் திருமணமாகாத ஒரு கன்னியின் வயிற்றில் மகனாக அவதரித்து பிறப்பார் (ஏசா. 7:14). சாத்தானுடைய தலையை நசுக்கி அவனது பிடியில் அடிமைகளாக இருக்கும் மனுக்குலத்தை மீட்பதற்காக ஆபிரகாமின் சந்ததியில், கன்னி மரியாளிடத்தில் மகனாக அவதரித்து பிறந்த அந்த மனிதன் – இயேசுகிறிஸ்து (மத். 1:18; லூக். 4:23-38).
நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றும்படி கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் (மத்தேயு 5:17)
கடவுளால் அங்கிகரிக்க தக்க வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்த கடவுள் நியாயப்பிரமாணங்களை கொடுத்தார். நான் பரிசுத்தராய் இருப்பது போல நீங்களும் பரிசுத்தராக இருங்கள் என்பதே கடவுளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கடவுள் எப்படி முழுமையான பரிசுத்தமுள்ளவராக இருக்கிறாரோ அதைப்போலவே அவரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமாயின் நாமும் முழுமையான பரிசுத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆனால் பூமியில் பிறக்கும் ஒவ்வொரு நபரும் பிறக்கும்போதே பாவ சுபாவத்துடன் பிறப்பதால் இது ஒருபோதும் சாத்தியம் அல்ல. எனவே இந்த உலகத்தில் வாழ்ந்த எந்த நபரும் (இயேசு கிறிஸ்து தவிர) நியாயபிரமாணத்தை முழுமையாக நிறைவேற்றவில்லை (சங். 14:3; ரோமர் 3:23). இயேசு கிறிஸ்து பாவமற்றவராக இருந்ததாலே முழுமையான பாவமற்ற வாழ்க்கை வாழ்ந்து நியாயபிரமாணத்தை முழுமையாக நிறைவேற்றினார் (மத். 3:15; ரோமர் 10:4; எபி. 7:26). இயேசு கிறிஸ்து அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ முடிந்ததற்கு காரணம், அவர் நம்மை போன்று பாவ சுபாவத்துடன் இந்த உலகில் பிறந்த மனிதன் அல்ல. எந்த ஒரு பாவமும் தன்னில் இல்லாத, மனிதனாய் பிறந்த கடவுளின் மகன்.
தன்னை மீட்க்கும் பொருளாய் கொடுக்கும்படி கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் (மாற்கு 10:45).
எப்படி ஒரு சுத்தமான பழுதற்ற ஆட்டுக்குட்டி பழைய ஏற்பாட்டில் பாவ நிவாரண பலியாக கொடுக்கப்பட முடியுமோ அதைப்போலவே, இறை மைந்தன் இயேசு கிறிஸ்து பாவமற்ற பரிசுத்தராக இருந்தபடியினாலே, அவர் கடவுளுக்கு பலியாக கொடுக்கப்பட முடியும் (எபி. 9:14). சுத்தமான பழுதற்ற ஆட்டுக்குட்டியை பலியிடுவது என்பது பின்னால் வரப்போகிற இயேசு கிறிஸ்துவை சுட்டிக்காட்டுவதாக மாத்திரம் இருந்ததால் மிருக பலி என்பது இயேசு கிறிஸ்து வரும் வரையும் ஒரு தற்காலிக தீர்வாகவே கொடுக்கப்பட்டது. பரிசுத்தரும் பழுதற்றவருமாகிய இயேசு கிறிஸ்து மனிதரை மீட்கும் படியாக சிலுவையில் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தார்.
உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்துவே (யோவான் 1:29). இயேசு கிறிஸ்து தனது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் பாவ பலி செலுத்தி சாத்தானை வென்றார். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் சாத்தானும், சாத்தான் மனிதரை அடிமைப்படுத்தி வைத்திருந்த பாவமும், பாவத்தின் சம்பளமாகிய மரணமும் வெல்லப்பட்டதற்கான அடையாளம் (1 கொரி. 15:3-4).
நிலைவாழ்வை கொடுக்கும்படி கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் (யோவான் 3:16)
இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணமடைந்து உயிர்த்ததின் மூலம் உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்தார். தன்னுடைய பாவ நிலையை உணர்ந்து யாரெல்லாம் இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைக்கிறார்களோ அவர்கள் மீட்கப்படுகிறார்கள் (யோவான் 3:14-15). அப்படி நாம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது கடவுளோடு நமது உறவு புதுப்பிக்கப்பட்டு கடவுளின் பிள்ளை என்கிற நிலையை பெறுகிறோம் (யோவான் 1:12). கடவுளின் பிள்ளையாய் கடவுளின் சொத்துரிமை பங்காளராகி, இறைவனுடையதை இலவசமாய் உரிமை சொத்தாய் பெறுகிறோம் (ரோமர் 8:17).
கடவுள் நித்தியர். எனவே கடவுளோடு உள்ள நமது உறவும் இனி நித்தியம். அந்த உறவானது கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறபடியால் எதுவும் அந்த உறவை பிரிக்க முடியாது.
நிறைவான வாழ்வை கொடுக்கும்படி கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் (யோவான் 10:10)
நிறைவான வாழ்வு என்பது உலகபிரகாரமான வெற்றியோ அல்லது அனைத்து பிரச்சனைகளிலும் இருந்து விடுதலையயோ அல்ல (யோவான் 16:33). கிறிஸ்து சிலுவையிலே நிறைவேற்றின செயலை நம்பி மனதில் அமர்ந்திருந்து, போதும் என்கிற மனதோடு கூடிய இறை பக்தி (1 தீமோ. 6:6). கடவுளை, அவருடைய கிருபையின் சத்தியத்தை அறிகிற அறிவினால் சீராக பரிசுத்தத்தில் வளருவது (கொலோ. 1:9-11). சர்வ வல்லமையுள்ள கடவுளை நம்பி, வாழ்வின் எல்லா சூழலிலும் கிறிஸ்துவுக்காக சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்வது (2 தீமோ. 2:24-26).
தன்னுடைய பாவ நிலையை உணர்ந்து, அதற்காக தன்னால் ஏதும் செய்ய இயலாது என்பதையும் அறிந்து, கடவுளால் இந்த உலகத்துக்கு அனுப்பப்பட்ட கிறிஸ்துவே தனது மீட்பர் மற்றும் ஆண்டவர் என்று விசுவாசிக்கிற நபர், கடவுளோடு பரிபூரண நித்திய உறவையும் அதின் விளைவாக நிறைவான நித்திய வாழ்வையும் இலவசமாய் பெற்றுக்கொள்ள கிறிஸ்து இயேசு இந்த உலகத்திற்கு வந்து வாழ்ந்து, சிலுவையில் அறையப்பட்டு, மரணமடைந்து, உயிர்த்தெழுந்தார்.
