செழிப்பின் உபதேசம் கள்ள உபதேசமா? என்கிற தலைப்பில் சகோதரர் ஜெயராஜ் விஜயகுமார் அவர்கள் எழுதிய புத்தகத்தை இந்த இணைப்பில் நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
வேதாகமம் சொல்கிற படைப்பின் அடிப்படையில் சகோதரர் செழிப்பை குறித்த ஒரு புரிதலை கொடுக்க முனைகிறார். பண ஆசைக்கும் செழிப்புக்குமான வித்தியாசத்தையும் குறித்து விவாதித்திருக்கிறார்.
இங்கே ஒரு சாமியார்த்தனமான கிறிஸ்தவமே பரப்பப்பட்டது. பரவியும் வருகிறது. (பண)பொருள் “ஆசை” எல்லா தீமைக்கும் வேர் என்கிற வேதாகம உண்மை “பொருளே தீமை” என்கிற கிரேக்க தத்துவமாக புரிந்துகொள்ளப் படுகிறது. இரண்டுக்கும் உள்ள வேறுபாடு வானத்துக்கும் பூமிக்குமானது. மனிதன் தன்னிலுள்ள தீமையை ஏற்க மனமில்லாமல் பணத்தின் மேல் பழிபோடுவது காலம் காலமாக நடப்பதுதான்.
மிக பொதுவாக எழுதியிருக்கிறார் என்பது என் முதல் விமர்சனம். ஆசிரியரும் அதை புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இரண்டு நூற்றாண்டுகளாக பரவி வரும் சாமியார்தன கிறிஸ்தவத்துக்கு இந்த பதில் போதாது. இன்னும் அதிக விளக்கங்களுடன் ஆழமாக அதிக பக்கங்கள் எழுதினால் சிறப்பு. செய்வார் என்று நம்புவோம்.
தலைப்புகள் போட்டிருக்கிறார் என்றாலும் இன்னும் தெளிவான தலைப்புகளும், உப-தலைப்புகளும் வாசிப்பை செழிப்பாக்கும். கடவுளின் திட்டத்தின் பகுதியாக ஏழ்மையும் பங்குவக்கிக்கிறது என்பதையும் சில கிறிஸ்தவர்களுடைய வாழ்வில் கிறிஸ்துவின் தன்மையை உருவாக்குவதற்கு ஏழ்மையையும் ஒரு கருவியாக கடவுள் பயன்படுத்துகிறார் என்பதையும் குறிப்பிடுவது புத்தகத்தை முழுயுள்ளதாக மாற்றும் என்பதும் என் எதிர்பர்ப்பாக இருக்கிறது
