துன்பமும் கிறிஸ்தவமும்

துன்பமும் கிறிஸ்தவமும்

இந்த உலக வாழ்வு ஒரு நாணயம் போன்றது. நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல இந்த வாழ்விலும் இன்பமும் துன்பமும் கலந்தே இருக்கிறது. கிறிஸ்தவ வாழ்வும் இதற்கு விதிவிலக்கு அல்ல. நாம் இந்த உலகில் வாழும் வரை நமது வாழ்விலும் இன்பமும் துன்பமும் கலந்தே காணப்படும். அதிலும் கிறிஸ்தவ வாழ்வில் நியாயமான துன்பத்திற்கென்று ஒரு தனி இடம் இருப்பதை வேதாகமம் உறுதிப்படுத்துகிறது.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார் (யோவான் 16:33). ஆதி அப்போஸ்தலர்கள் சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள் (அப் 14:22). பவுலடியார் திமோத்தேயுவுக்கு எழுதும்போது “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” (2 திமோ 3:12) என்று எழுதினார். எந்த ஒரு உபத்திரவமும் இல்லாத சுமூகமான ஒரு கிறிஸ்தவ வாழ்வு இல்லை. இந்த நாட்களில் பிரச்சனையே இல்லாத கிறிஸ்தவ வாழ்வே பிரசங்கிகப்படுகிறது. ஒருவன் உண்மையான கிறிஸ்தவனாக இருப்பானானால் அவனுக்கு எந்த பிரச்சனையுமே இருக்காது என்பது தவறானதும் வேதாகமத்திற்கு முரணானதுமான போதனை. பிரச்சனையே இல்லாத வாழ்வு என்கிற மாயையான எண்ணத்தை விட்டு முதலாவது நாம் வெளியே வரவேண்டும். எதார்த்தமான கிறிஸ்தவ வாழ்வை எதிகொண்டு பழகவேண்டும். 

கிறிஸ்தவர்கள் அவசியமான துன்பங்களை மனமுவந்து ஏற்கும் பகுவத்திற்குள் வரவேண்டும். கிறிஸ்தவ வாழ்வில் வரும் துன்பங்களை நாம் ஆராய்ந்து பார்ப்போமானால் அவைகளை நாம் அவசியமானது அல்லது அவசியமற்றது என பொதுவாக பிரிக்கலாம். நமது கிறிஸ்தவ வாழ்வில் (தனி நபராகவோ, குடும்பமாகவோ, குழுவாகவோ அல்லது ஒரு சபையாகவோ) அவசியமான துன்பங்களை நாம் மனமுவந்து ஏற்கும் பக்குவத்திற்கு வராவிட்டால் அவசியமற்ற துன்பங்களை நாம் அனுபவிக்க நேரிடும்.

இரண்டாவது அவசியமான துன்பங்களை நாம் ஏற்க பழகவேண்டும். இந்த உலகில் யதார்த்தமாக கிறிஸ்தவ வாழ்வு வாழுகிறோமா இல்லையா என்பது அநித்தியன இன்பங்களுக்கும் நித்திய இன்பங்களுக்கும் இடையிலான தெரிந்தெடுப்பே என்பதை மனதில் கொள்ளவேண்டும். நித்தியமான இன்பத்தை தெரிந்தெடுத்தல் என்பது பல வேளைகளில் அநித்தியமான இன்பங்களை புறக்கணிப்பதே. 

விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து,அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு,இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான் (எபி 11:24-26). 

எபேசு திருச்சபை மூப்பர்களிடத்தில் பவுலடியார் “இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன்.கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன். ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்” (அப் 20:22-24) என்று பேசினார். 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் துன்பங்களை மனமுவந்து ஏற்பதற்கு சிறந்த முன்மாதிரியை வைத்துவிட்டு போனார். மனுக்குலத்தினுடைய பாவத்தை தன்மேல் சுமந்து சிலுவையில் பாடுபட்டு மரிப்பதை மனமுவந்து ஏற்றார். அதே சிந்தை நம்மிலும் இருக்கவேண்டும் என்றே வேதாகமம் நமக்கு போதிக்கிறது. பிலிப்பியர் 2:5-8 கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

எனவே அவசியமான துன்பங்களை மனமுவந்து ஏற்ப்பதே கிறிஸ்தவ பக்குவம். சிறிய காரியங்களிலிருந்து பெரிய காரியங்கள் வரை இது உண்மை. அதிகாலையில் எழுந்து வேதத்தை தியானித்து ஜெபிப்பது என்பது அனேக நேரங்களில் இலகுவாக இருப்பது இல்லை. ஆனால் பலருக்கு அந்த நேரத்தை விட்டால் தியானித்து ஜெபிப்பதற்கென்று வேறு சிறந்த நேரமும் இருப்பது இல்லை. எனவே கடினம்தான், ஆனாலும் அதன் மேன்மையை எண்ணி அந்த சிறிய துன்பத்தை ஏற்க முன்வருவோமானால் அதுவே பக்குவம். 

இன்று பலர் “பொருளாதாரமே ஆசீர்வாதம்” என்கிற தவறான கிறிஸ்தவ போதனைக்கு தங்களை விட்டுக்கொடுத்து பல தவறான முடிவுகளை எடுப்பதை கண்கூடாக காணமுடிகிறது. ஒரு உதாரணம் கிறிஸ்தவ மாப்பிள்ளை பார்க்கும் பெண் பார்க்கும் படலத்தில் பல கிறிஸ்தவ பெற்றோரிடத்தில் பணமும் அழகுமே ஜெயிக்கிறது. பக்தியுள்ள சற்று குறைவான வருமானம் ஈட்டும் மாப்பிள்ளையைவிட பக்தியற்ற பல லகரங்களில் சம்பளம் வாங்கும் மாப்பிள்ளையே ஜெயிக்கிறார். பக்தியுள்ள “சுமாரான” பெண்ணை விட பக்தியற்ற “பளபளக்கும்” பெண்ணே ஜெயிக்கிறார்.

நல்ல சம்பளம் பெறும் மணமகனோ, அழகான மணமகளோ பக்தியற்றவர்கள் என்பது அல்ல என் கருத்து. கிறிஸ்தவ பெற்றோர்களின் பொதுவான மன நிலையையே இங்கு பிரதிபலிக்க விரும்புகிறேன். பணமும் அழகுமே பிரதானம் என்கிற மன நிலையில் வாழும் உலகத்தாருக்கும், உலகப்பிரகாரமான கிறிஸ்தவர்களுக்கும் மத்தியில் பக்திக்கு முன்னுரிமை கொடுத்து வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது துன்பம்தான். பலருடைய ஏளனமான பேச்சுக்கும் பார்வைக்கு உள்ளாக வேண்டியது இருக்கும். எனினும் மனமுவந்து அதை செய்வோமானால் அதுவே பக்குவம்.

சரி. அவசியமான இந்த துன்பங்களை ஏற்க விரும்பாமல் ஒரு கிறிஸ்தவன் அநித்தியமான இன்பங்களையே தேர்ந்தெடுப்பானானால் அவன் எந்த துன்பமும் இல்லாமல் இவ்வுலகில் வாழ்ந்துவிடுவானா? என்கிற கேள்வியை முன்வைத்தால் வேதம் கொடுக்கும் அதிர்ச்சியான பதில் “இல்லை”. அவசியமற்ற மிக கடினமான துன்பங்களை சந்திப்பான்.

பவுல் தீமோதேயுவுக்கு எழுதுகிறார் “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம். ( இது அவசியமான துன்பம்). ஐசுவரியாவன்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.” (இது அவசியமற்ற துன்பம்) (1 தீமோ 6:6-10).

 ஒருவன் உண்மையிலேயே கிறிஸ்தவனாக இருப்பானானால் துன்பம் என்பது அவனுடைய வாழ்வில் பிரிக்கமுடியாத பகுதி. எந்த துன்பமுமே இல்லாமல் என் வாழ்க்கையை இன்பமாகவும், சுமூகமாகவும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்று ஒரு கிறிஸ்தவன் சொல்வானானால் அவன் உண்மையிலேயே கிறிஸ்தவன் தானா? என்கிற கேள்வியையே எழுப்பவேண்டும். கிறிஸ்தவர்கள் தேவனுடைய பிள்ளைகள். தேவனுடைய பிள்ளைகள் தவறான காரியங்களை செய்யும்போது பரம தகப்பன் அவர்களை சிட்சித்து திருத்துகிறார். நாம் பரிசுத்தமுள்ளவர்களாகவும், அன்பிலே பரிபூரணம் உள்ளவர்களாகவும், தேவ சமூகத்தில் ஒரு நாள் குற்றமற்றவர்களாகவும் நிற்கவேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம். கிறிஸ்துவுக்குள் நாம் இப்பொழுதே முழுமையாக குற்றமற்றவர்கள். ஆனால் அதை யதார்த்த வாழ்விலும் உண்மையாக்க நம் வாழ் நாளின் கடைசி நொடிவரை தேவன் செயல்பட்டுக்கொண்டே இருப்பார்.

எனவே அவசியமான துன்பங்களை மனமுவந்து ஏற்றுக்கொள்ள பக்குவப்படுவோம். கர்த்தர் கொடுக்கும் சிலுவையை முழுமனதோடு சுமப்போம். அந்த கிருபையை அவரே நமக்கு தருவார். தேவனுடைய சமாதானம் உங்களோடு இருப்பதாக. ஆமேன்.

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.   மத் 11:28-30

One thought on “துன்பமும் கிறிஸ்தவமும்

Leave a Reply