பாட்ரிக் ஜாஸ்வா

பாட்ரிக் ஜாஸ்வா

அழகிய மனிதரின் அழுகையின் ஜெபங்கள்!

முதன்முதலாக பாட்ரிக் அண்ணன் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட போது பதினாறு வயதை கூட நான் தாண்டவில்லை! 
மிகச் சாதாரண பேச்சும், வெள்ளை கலர் சட்டையும் காக்கி கலர் பான்டுமாக பெரிய மூக்கு கண்ணாடியுடன் வந்திருந்த அவரிடம் வசீகரிக்கும் எதுவும் அப்போது இல்லை!

இந்தியாவை குறித்த தேசிய கரிசனை களை மிகைப்படுத்தாமல் சாதாரண தொனியில் எப்பொழுதுமே அவர் பேசக் கேட்டிருக்கிறேன்!

நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவின் நண்பர்கள் அவர் மிகப் பெரிய வேலையை கிறிஸ்துவுக்காக ராஜினாமா செய்துவிட்டு எளிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டுவருவதாக அறிவித்தார்கள்! 

மிகப்பெரிய வேலை என்பது இரண்டு மூன்று மாநிலங்களுக்கு அப்போதே காப்பீட்டு கழகத்தின் பொறுப்பாளராக இருந்திருக்கிறார். 5 டிஜிட்டில் சம்பளம் வாங்கியிருக்கிறார். 1970 களிலேயே கார் தொலைபேசி உட்பட டீசன்டான வாழ்க்கை வாழ்ந்தவர். 

மன்மோகன்சிங்கை போல நிறைய விஷயங்கள் அவருக்குள் இருந்தாலும் அவர் வாய் திறப்பதும், பேசுவதும் மிகவும் கொஞ்சம் தான்! 

ஒரு புன்முறுவலோடும் ஒரு கைகுலுக்குதலோடும் அவருடனான சந்திப்பு பல நேரங்களில் நிறைவடைந்திருக்கிறது!

நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவில் அவர் பொதுக் காரியதரிசி என்னும் பெரும் பணியாற்றியபோது நடைபெற்ற மாநில முகாம் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது வாலிபர் பிரிவிலிருந்து பெரியவர்கள் கூட்டம் நடக்கும் அந்த பெரும் கொட்டகையில் ஒரு ஓரமாக உட்கார்ந்து மிஷனரிகள் என்ன சொல்லுகிறார்கள் என்பதை கவனித்துக் கொண்டிருந்தேன். சட்டென்று பின் திரும்பியபோது எனக்கு பின்பதாக மிக நெருக்கமாக மணல் தரையில் கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்து என்னைப் போலவே அவரும் கவனித்துக் கொண்டிருந்தார். அந்த ஒரு கணப்பொழுது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சி அப்போது மாபெரும் ஊழியர்களாக அறியப்பட்ட பலரிடமிருந்து இவரை தனித்து நிறுத்தியது! 

அன்றுமுதல் அவரோடு ஒரு ஈர்ப்பும் அவர்மீது பெரும் மரியாதையும் ஏற்பட்டது! 
பிற்காலங்களில் பெரிய அளவில் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் நெருங்கியிருக்கவும் சில பல நேரங்களில் சந்தித்துக் கொள்ளவும் ஒரு சில இடங்களில் அவர்களோடு பயணிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அப்போதெல்லாம் கண்டுபிடித்த உண்மை அவருடைய உலகம் வேறு என்பதைத்தான்! 

மனிதர்களிடம் அவர் பழகியதை விட கடவுளிடம் அவர் பழகியது தான் அதிகமாக இருந்தது!
பூமியில் அவர் பேசியதைவிட
பரலோகத்தில்தான் அவர் சத்தம் அதிகமாக ஒலித்துக் கொண்டிருந்தது!

“ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம்” என ஒரு பாடல் அவர் எழுதி இருந்தார். அந்தப்பாடலாகத்தான் அவர் வாழ்ந்தார்!

தன் கால்களால் அவர் நடந்ததை விட முழங்கால்களால் அவர் நடந்தது தான் அதிகம்!

இந்திய தேசத்தின் மிஷனரி தரிசன அலையை வட இந்தியா பக்கம் நம் காலகட்டத்தில் திருப்பியவர்களில் தன்னிகரற்ற தலைவராக விளங்கிய எமில் ஜெபசிங் அண்ணனும் பாட்ரிக் ஜாஷ்வா அண்ணனும் மிக நெருங்கிய நண்பர்கள். பாட்ரிக் ஜாஷ்வா அண்ணனை நினைவு கூறும் போதெல்லாம் ஜெபத்திற்காக தன்னை விற்று போட்டவர்கள் என்று எமில் ஜெபசிங் அண்ணன் கூறுவதை பலமுறை கேட்டிருக்கிறேன்.

எமில் அண்ணன் ஆண்டவருடைய ராஜ்ஜியம் சென்றுவிட்ட போது அடக்க ஆராதனைக்கு தன்னால் இயலாத போதும் வந்திருந்தார்கள்!

ஜெபிக்கிறவர்களுக்கு ஜெபிக்கிறவர்களைப் பிடிக்கும். ஜெபிக் கிறவர்களின் ஐக்கியம் செயல் வீரர்களை உருவாக்கும்! செயல்வீரர்களின் சங்கமம் சிலுவை வீரர்களாய் மாற்றிவிடும்!

முழங்கால் வீரராய் தன் வாழ்க்கையில் முன்னேறி இன்று ஆண்டவருடைய வீட்டில் பிறந்தநாளை கொண்டாடும் அண்ணன் அவர்களின் வாழ்க்கை பின்பற்றத் தகுந்த நல்ல முன்மாதிரி!

ஆண்ட்ரு போனர் ஒரு முறை சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது! “ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தான்! ஏனோக்கும் தேவனும் ஒரு நாளின் பெரும் பொழுதுகளில் பேசிக்கொண்டே இருந்தார்கள்! ஒருநாள் தேவன் ஏனோக்கிடம் சொன்னார் மகனே நெடுந்தூரம் நடந்து வந்து விட்டாய் உன் வீடு தூரமாக இருக்கிறது என் வீடு மிக அருகில் வந்துவிட்டது அதனல் நீ இனிமேல் என்னுடைய வீட்டிலேயே இருந்து விடலாம் என்று!”

பூலோகத்தில் ஆண்டவரோடு சஞ்சரித்துக் கொண்டிருந்த அண்ணனுக்கு அவர் மிகவும் நேசித்த வீடு நெருங்கிவிட்டது! 

சென்று வாருங்கள் அண்ணன்!

Leave a Reply