மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறீர்களா?
மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன் என்று உலகத்திடம் சொல்லிப்பாருங்கள்… அதற்கு சாத்தியமே இல்லை என்று உலகம் சொல்லும்.
உனது தற்காலிக மகிழ்ச்சிகளைக்கூட தட்டிப்பறிக்கக்கூடிய அளவுக்கு உனது உடலிலும், குடும்பத்திலும், வேலையிலும் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது. நீ எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்க்கு தேவையான காரணிகள் எதுவும் உன்னிடத்தில் இல்லை. நீ அந்த இடத்தை அடைவதும் கடினம். அதுமட்டுமல்ல, இப்போது உலகம் போய்க்கொண்டிருக்கிற போக்கில் உயிர்வாழ்வதே கடினம் என்ற சூழலில் மகிழ்ச்சியாவது மண்ணாவது என்று சொல்லும்.
நான் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன் என்று மதத்திடம் சொல்லிப்பாருங்கள்…
அதற்கு உனக்கு அருகதையே இல்லை என்று மதம் சொல்லும். உனது கிரியைகளின் நிமித்தம் தேவன் உன்மீது கோபமாக இருக்கிறார். உன் வாழ்க்கை இன்னும் தேவனை திருப்திப்படுத்தும் அளவுக்கு இல்லை, நீ கைவிட வேண்டியதும், பின்பற்ற வேண்டியதும் இன்னும் ஏராளம் இருக்கிறது. எனவே மகிழ்ச்சியாக இருக்க உனக்கு உரிமையில்லை. இரட்டை உடுத்தி, சாம்பலில் உட்காருவதை விட்டுவிட்டு மகிழ்ச்சியாவது மண்ணாவது என்று சொல்லும்.
மகிழ்ச்சியாக இருப்பது சாத்தியமில்லை என்று உலகம் சொல்லும், மகிழ்ச்சியாக இருக்க உனக்கு அருகதை இல்லை என்று மதம் சொல்லும். ஆனால் இரண்டுமே பிசாசின் அப்பட்டமான பொய்கள். ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய அடி ஆழ்மனதிலும் இந்த இரண்டு பொய்களும் வலுவாகப் பதிக்கப்பட்டிருக்கிறது.
சரி, முதலில் மதத்தின் பொய்யை உடைப்போம்…செழிப்பான ஏதேனில் கர்த்தர் மனிதனை வைத்ததன் நோக்கமே அவன் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதுதான். தனது கீழ்ப்படியாமையின் நிமித்தம் ஆதாம் இழந்த மகிழ்ச்சியை, தனது கீழ்ப்படிதலின் நிமித்தம் கர்த்தராகிய இயேசு “நமக்காக” நிரந்தரமாக மீட்டுக்கொண்டார்.
மகிழ்ச்சியாக இருப்பதற்கான அருகதையை இழந்ததற்கு பாவம்தான் காரணமென்றால், அந்த அருகதையை நிரந்தரமாக மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு நாம் தரித்திருக்கும் கிறிஸ்துவின் நீதியே போதுமானதாக இருக்கிறது. இனி நித்திய மகிழ்ச்சிக்காக நாம் பரலோகம் செல்லுவரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நித்திய மகிழ்ச்சி நம் தலைமேல் நிரந்தரமாக தங்கியிருப்பதற்கான அத்தனை தகுதிகளும், உரிமைகளும் நமக்கு கிறிஸ்துவின் மூலம் கிடைத்தாகிவிட்டது. எனவே “அருகதை, உரிமை” என்ற பேச்சுகளுக்கெல்லாம் இனி இடமேயில்லை
அடுத்து உலகத்தின் பொய்யை உடைப்போம்…”மகிழ்ச்சியின் மூலம் எது?” என்ற கேள்வியே இங்கு மிக முக்கியமானதுதிரித்துவ தேவனே மகிழ்ச்சிக்கு ஊற்றும் காரணருமாக இருக்கிறார். அவரோடு கிறிஸ்துவின் மூலம் இணைக்கப்பட்டதன் நிமித்தம் நமக்குள் மகிழ்ச்சி ஜீவநதியாகப் பாய்கிறது. இது நமது கிரியைகளோடு சம்பந்தப்பட்டதல்ல, யாரோடு இணைக்கப்பட்டிருக்கிறோம் என்பது சம்பந்தப்பட்டது.
மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறீர்களா?
ஆதாமோடு இணைந்திருந்தவரை வெறுமை நமக்குள் கிரியை செய்தது. ஏனெனில் அந்த இணைவு சாபத்துடன் தொடர்புடையது. கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டபின் நிறைவு நமக்குள் கிரியை செய்கிறது. ஏனெனில் இந்த இணைவு ஜீவனுடன் தொடர்புடையது.
தேவனற்றவர்களிடம் உலகம் போலியான, நிலையற்ற மகிழ்ச்சியைக் கொடுத்து ஏமாற்றுகிறது. தேவனை அறிந்தவர்களிடம் மதம், இந்த உலகமானது மகிழ்ச்சிக்கான இடம் இல்லை என்று சொல்லி ஏமாற்றுகிறது. நிச்சயமாகவே இந்த உலக வாழ்வில் நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன் (பிலிப்பியர் 4:4 ) என்ற வார்த்தை மரித்தவர்களுக்கு அல்ல, இந்த பூமியில் உயிரோடு இருக்கும் விசுவாசிகளுக்கு எழுதப்பட்டதுதான். இது கட்டளையும்கூட…உண்மையில் மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்ள நாம் எதையும் சாதிக்க வேண்டியதில்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் சத்தியத்தை விசுவாசிக்க வேண்டும். அவ்வளவுதான்!
“நான் பிதாவோடு கிறிஸ்துவின் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறேன்” என்ற சத்தியத்தை அறிவதுதான் நம்மை விடுதலையாக்கும். நமக்கு கிடைத்துள்ள மீட்பையும், நாம் பெற்றுள்ள சிலாக்கியங்களையும் அறிந்துகொண்டாலே நமது அன்றாட வாழ்வில் மகிழ்ச்சி ஒரு நிரந்தர அங்கமாகிவிடும். பூமியில் நாம் சுவாசிக்கும் காற்று கூட நமக்கு இனிமையானதாகத் தோன்றும். நமது அன்றாட வாழ்வில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓட வேண்டும் என்பதே தேவசித்தமாகவும் நமது அடிப்படை உரிமையாகவும் இருக்கிறது.
எழுத்தாளரின் மற்ற பல பதிவுகளை www.brovijay.com என்கிற இணையதளத்தில் வாசிக்க முடியும்.