கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
ஆண்டவர் தம் பிள்ளைகளாகிய நம் வாழ்வில் அனுமதிக்கும் எந்த காரியத்திற்கும் நோக்கம் இல்லாமல் இல்லை. வாழ்வின் சில படிப்பினைகளையும், புரிதல்களையுல் சில தருணங்கள் நமக்கு தெளிவாக, உணர்வுப்பூர்வமாக தெரிந்து கொள்ள செய்கிறது.
(அன்று மருத்துவமனை அவசரப்பிரிவில்) மூச்சு விடச் சிரமப்பட்ட ஓர் 9 வயது நிரம்பிய சிறுவன், தனக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் (சுய நினைவில்லாமல்) வலிப்பு வந்து அவதிப்படும் முதியவர், பாம்பு கடித்ததால் சிறு நீரகம் பாதிக்கப்பட்டு, தூக்கமில்லாமல் தவிக்கும் நடுத்தர வயதுடையவர், திடீரென்று ஏற்பட்ட இருதய அடைப்பினால் 4 நாட்கள் வீட்டிற்கே செல்ல முடியாத நபர், தலையில் அடிபட்டு கிடக்கும் வாலிபர் என ஒவ்வொருவரும் ஒரு தொல்லையோடு….)
மனுபுத்திரர் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன் (பிர.3:10)
வாழ்வு காலத்தில் நன்மையை அநுபவித்திரு, தாழ்வு காலத்தில் சிந்தனை செய்! (7:14) என வேதம் சொல்கிறபடி, துன்பத்தின் நேரத்தில் சிந்தனை செய்தபோது (சிந்தனை செய்ய முடியாத அளவிற்கு துன்பம் இல்லாதபடியால்), என் மனதில் உண்டான எண்ண ஓட்டங்களை எழுத விரும்புகிறேன். இது வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் பிரயோஜனமாய் இருக்கும் என நம்புகிறேன்.
1. இயற்கையான அனைத்தும் இயற்கைக்கு அப்பாற்பட்டவைகளே!
நம் வாழ்வில் இயற்கையாய் நடக்கிற அனைத்தும் இயற்கைக்கப்பாற்பட்ட அற்புதங்களே! தேவன் என்றும் அற்புதம் செய்கிறார். நாம் தான் அதனை உணராதிருக்கிறோம். நம் சரீரத்தில் சுகவீனம் உண்டாகாதவரை, சுகமாயிருப்பது ஏதோ இயற்கையாய் நடக்கிறதாகவே, இயல்பானதாகவே எண்ணுகிறோம். நம் சரீரத்தின் அனைத்து அவயங்களும் செயல்படுவதும், செயல்படுகிற விதமும் ஓர் அற்புதம் என்பதை உணர்ந்திருக்கிறோமா? “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உருவாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்.” (சங்.139:14) என தாவீது கூறுவதை மனதில் கொள்வோம். ஒரு அவயம் தன் செயலை நிறுத்தும்போதோ, அல்லது செயல்படுவதில் சிக்கல் ஏற்படும்போதோ தான் அதின் முக்கியத்துவத்தை அறிகிறோம். மூச்சுவிடக் காற்று இருந்தும், சுவாசிக்க முடியாமல், தண்ணீர் இருந்தும் குடிக்க முடியாமல், கை கால்கள் இருந்தும் செயல்பட முடியாமல் இருக்கிற நபர்களை காணும்போது, நாம் இயல்பாய் அனுபவிக்கிற அற்புதங்களை மறக்கக் கூடாது என நினைவுபடுத்துகிறது.
2. பாவமும், அதின் விளைவும் மிக கொடுமையானது!
எந்த ஓர் வியாதியும், அதை உடைய நபரின் பாவத்தினால் விளைந்தது என கூற முடியாது. ஆனால், அனைத்து வியாதிகளும், மனுக்குலத்தின் பாவத்தின் விளைவுகள்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு செயலால் உண்டாகிற பாதிப்பின் அடிப்படையிலேயே அந்த செயலின் தன்மை தீர்மானிக்கப்படுகிறது. வேதம் சொல்கிறபடி, பாவம் இவ்வளவு வேதனைகளையும், சரீர மரணத்தையும் உண்டுபண்ணியிருக்குமானால் அது எவ்வளவு கொடுமையானது! நம் பாவத்திற்கு பலியாக ஏன் மிக கொடுமையான மரணத்தை கிறிஸ்து அடையவேண்டியது அவசியமாயிருந்தது (ஏசா.53) என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. கிறிஸ்து நமக்காக சிலுவையில் செய்து முடித்த கிரியை எவ்வளவு மேன்மையானது. பாவ நிலையில் என்றென்றும் உயிரோடு இருந்துவிடக் கூடாது என ஆதாம், ஏவாளை ஏதேன் தோட்டத்திலிருந்து தேவன் துரத்தினது அன்பின் வெளிப்பாடு என்பதை உணர முடிகிறது (ஆதி.3:22-24). பாவ உலகில் இருக்கும், அதின் வேதனைகளை அதிகமாய் அனுபவிக்கும் ஒரு நபருக்கு “மரணம்” என்பது தேவன் அருளும் கிருபையாகவே தோன்றுகிறது.
3. நல்ல நட்பும், உறவும் தேவனுடைய குடும்பத்தின் தன்னிகற்ற சிறப்புகள்!
நான் மருத்துவமனையில் இருந்தபோது (கடந்த முறையும் கூட) என் உடல் நிலை பற்றி என் பெற்றோரிடமோ, உடன் பிறந்தோரிடமோ பகிர்ந்து கொள்ளத் தோன்றவில்லை. அதனை அவசியமாக உணரவும் இல்லை. கிறிஸ்துவினிமித்தம் தேவன் எனக்களித்த உறவுகளின் அன்பும், கரிசனையும் மிக அருமையானது. தேவ பிள்ளைகளே, இந்த மேன்மையான உறவை, திருச்சபையில் தொடர்ந்து அனுபவிப்போம். நாம் நித்திய தேவ குடும்பத்தின் அங்கத்தினர்கள் என்பது எவ்வளவு மேன்மையானது! ஒருவருக்கொருவர் ஜெபிக்கிற, நலம் விசாரிக்கிற, உதவி செய்கிற, கிறிஸ்துவுக்குள்ளான குடும்பங்களை பெற்றிருக்கிற நாம் பாக்கியவான்கள்! எவரிடமிருந்து எனக்கு உதவி தேவையில்லை என்ற நிலையிலோ, யாருக்கும் என் உதவி தேவையில்லை என்ற மன நிலையிலோ நாம் இருக்க கூடாது. தேவன் நாம் ஒருவரையொருவர் சார்ந்திருக்குபடியே வைத்திருக்கிறார் (கொலோ.3:12-14) என்பதை உணர்ந்து வாழ்வோம்.
4. வலியில்லாமல் சுகம் இல்லை!
சிறிய பிரட்சனையோடு வருகிறவர்களுக்கு, அதனைக் காட்டிலும் வேதனையுள்ள மருத்துவம் செய்யப்படுகிறது. ஏனென்று யோசிக்கும்போது, மிகப்பெரிய வேதனை அவர்களுக்கு வரக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையான நடவடிக்கை என்பது தெரிகிறது. நம் வாழ்விலும் தேவன் அதையே செய்கிறார். மிக மோசமான வேதனை நிலைக்கு நாம் செல்லாமல் இருக்க, நாம் விரும்பாவிட்டாலும் நமக்கு வலி உண்டாக்குகிற சீர்படுத்தலை செய்கிறார். தன் குழந்தை விரும்பாவிட்டாலும், பின் நாட்களில் வியாதியினால் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, இன்று வலியை உண்டாக்கும் தடுப்பூசியை தன் குழந்தைக்கு (அன்பினிமித்தம்) போடும் தாயைப்போலவும், தவறுகிற தன் பிள்ளையை கண்டிக்கும் தகப்பனைப்போலவும் நம் ஆண்டவரும் இருக்கிறார்(எபி.11:5-11). ஆம் வலியில்லாமல் சுகமில்லை; பாடுகள் இல்லாத பரிசுத்த வாழ்வு இல்லை; வேதனைகள் இல்லாத சாதனைகள் இல்லை; சிலுவை இல்லாமல் உயிர்த்தெழுதல் இல்லை!! அநேக நேரங்களில் வேதனைகள் நம் அன்பின் தேவன் நம்மை தம்மிடம் நெருங்கிச் சேர்க்கவும், தாம் விரும்பும்படி வாழச் செய்யவும் பயன்படுத்தும் வலிமையான உபகரணமாய் இருக்கிறது.
5. தேவனுக்காக வாழ்வதே நிறை வாழ்வு!
வாய்ப்புகளும், நேரங்களும் நம்முடையவைகளல்ல; தேவன் நமக்கு கிருபையாய் தருபவை. நாம் ஆண்டவருக்கென்று நேரம் இல்லாதவர்களாகவே இருக்கிறோம். எப்பொழுதும் மிக அலுவலாய் இருக்கிறோம். பல நாட்களாக, இயல்பான உலகை காண முடியாதவர்களாக, இயல்பான வாழ்வு வாழ முடியாதவர்களாய் மருத்துவமனையில் அநேகரை காண முடிகிறது. ஒரு சுகவீனம் அவர்களுடைய நேரம், காலம், வேலைத்திட்டங்கள் அனைத்தையும் மாற்றி அமைத்து விடுகிறது. மோசே ஜெபிப்பது போல, “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும் (சங்.90:12)” என வேண்டிக்கொள்வோம். அருமையானவர்களே, ஆண்டவருக்கான காரியங்களில் சாக்குப் போக்கு சொல்லாதிருப்போம். “இந்த நாட்கள் பொல்லாதவை. ஆகவே, காலத்தை முற்றும் பயன்படுத்துங்கள் (எபே.5:16)” என்ற பவுலின் ஆலோசனையின்படி ஆண்டவர் நமக்கு கொடுத்திருக்கிற வாழ்நாளையும், நேரத்தையும் அவருக்காக செலவழிப்போம்!
