முன்னுரை

முன்னுரை

தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, (ஆதி. 1:1) என்கிற வேதாகமத்தின் முதல் வாக்கியமே கிறிஸ்வத்தில் மாத்திரம் அல்ல இந்த உலகத்திலும் இருக்கிற பல்வேறு குழப்பங்களுக்கு விடையளிப்பதாய் இருக்கிறது. இந்த உலகத்தையும் அதின் நிகழ்வுகளையும் கவனிக்கும் எந்த ஒரு சிந்திக்கும் நபருக்கும் இயல்பாக எழும் சில கேள்விகள், நான் யார்? எனது வாழ்வின் நோக்கமென்ன? இந்த உலகில் உள்ள துன்பங்களுக்கு காரணம் என்ன? போன்றவைகள். இந்த கேள்விகள் வரலாற்றின் எல்லா காலகட்டங்களிலும் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்கு பல்வேறு பதில்கள் கொடுக்கப்பட்டாலும் வேதாகமம் படைத்த ஒரு இறைவனைப்பற்றியும் தோல்வியடைந்த மனுக்குலம் பற்றியும் தோல்வியடைந்த மனுக்குலத்தை மீட்க கடவுள் என்ன செய்தார் என்றும் சொல்லுகிறது. கடவுள் யார்? என்கிற கேள்விக்கு சரியான பதில் காணுவதன் மூலமே இறைவனால் படைக்கப்பட்ட மனிதன் யார்? என்கிற கேள்விக்கு சரியான பதிலை அடைய முடியும்.

முழு வேதாகமமும் இறைவனையும் அவரது படைப்பையும் பற்றியது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் இறைவனையும் அவரது செயல்பாடுகளையும் பற்றியது. கடவுள் யார்? அவரின் தன்மைகள் என்ன? அவரது குணாதிசயங்கள் என்ன? அந்த கடவுள் எப்படி செயல்படுகிறார்? என்பதை தெளிவாகவும் விளக்கமாகவும் பதிவுசெய்திருக்கும் புத்தகமே வேதாகமம். கடவுளே வேதாகமத்தின் மையமாகவும் மூலப்பொருளுமாய் இருக்கிற படியால், வேதாகமத்தை அடிப்படையாகக் கொண்டு எழுத்தப்படுகிற இந்த புத்தகத்தின் மையப்பொருளும் அவரே.

வேதாகமமே நமது படிப்பின் ஆதாரம். ஏன் வேதாகமத்தை மாத்திரம் நமது படிப்பின் ஆதாரமாக கொள்ளவேண்டும்? எனென்றால் அது மாத்திரமே இறைவனால்  வெளிப்படுத்தப்பட்ட இறை வார்த்தை (2 தீமோ. 3:16). வெளிப்படுத்தப்படுதல் என்றால் மறைவான ஒன்றை வெளிப்படையாக்குதல் என்று பொருள்படும். தன்னைப்பற்றி மனிதர்கள் சரியாக அறியமுடியாத நிலையில், கடவுள் தன்னை குறித்தும், தன்னுடைய படைப்பைக் குறித்தும், தன்னுடைய செயல்பாடுகள் குறித்தும் வெளிப்படுத்தினதே இறைவெளிப்பாடாகிய வேதாகமம். கடவுள் தன்னை வெளிப்படுத்தினால் மட்டுமே நாம் அவரை அறிய முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே இறைவார்த்தையானது சரியாக அர்த்தம் கொள்ளப்பட்டு புரிந்துகொள்ளப்பட வேண்டும். இந்த புத்தகமானது மிகவும் எளிமையாக ஆனால் சரியாக வேதாகமத்தின் அடிப்படை போதனையை விவரிக்க முற்படுகிறது.
வேதாகமத்தை குறித்த சில உண்மைகளை அறிவது வேதாகமத்தின் உண்மைத்தன்மையையும் கடவுளே இதன் உண்மையான ஆசிரியர் என்பதையும் புரிந்துகொள்ள உதவி செய்யும். வேதாகமம் தோராயமாக கி.மு. 1500 முதல் கி.பி. 100 க்கு இடைப்பட்ட 1600 வருட இடைவெளியில் எழுதப்பட்டது. பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு என இருபெரும் பிரிவுகளாக வேதாகமம் பிரிக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாடு 39; புதிய ஏற்பாடு 27: மொத்தம் 66 நூல்களை உள்ளடக்கிய தொகுப்பே வேதாகமம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த புத்தகங்கள் ஒரே இடத்தில், ஒரே நபரால், ஒரே காலகட்டத்தில் எழுதப்பட்டவை அல்ல. நாற்பது வெவ்வேறு மனிதர்கள் இறைவனால் பெலப்படுத்தப்பட்டு எழுதினார்கள். அனேக நேரங்களில் வேதாகமத்தின் புத்தகங்களை எழுதின மனித ஆசிரியர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் அற்றவர்கள். கடவுள் சமுதாயத்தின் பல்வேறு நிலைகளில் இருந்த மனிதர்களை பயன்படுத்தி இந்த புத்தகங்களை எழுதினார். அரசர்கள், அரசாங்க அலுவலர்கள், ஆசாரியர், தீர்க்கதரிசிகள், ஞானிகள், விவசாயி, வரி வசூலிப்பவர், மீனவன், மருத்துவர் என வேதாகமத்தின் புத்தகங்களை எழுதியவர்களின் பின்ணணி மற்றும் சூழல் வெவ்வேறானது.

வேதாகமத்தின் புத்தகங்கள் எழுதப்பட்ட இடங்கள் மற்றும் சூழல்களும் வேறுபட்டவைகளே. வனாந்திரங்கள், மலை முகடுகள், குகைகள், கோவில் பிரகாரங்கள், அரண்மனைகள், கிராமங்கள், நகரங்கள், சிறைச்சாலை, ஆற்றங்கரை மற்றும் ஆளில்லா தீவு. பிரதானமாக இரண்டு மொழிகள் பயன்படுத்தப்பட்டது. பழைய ஏற்பாடு எபிரேய மொழியிலும் புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டது.

வேதாகமத்தில் உள்ள புத்தகங்களை எழுதியதில் இத்தனை வேற்றுமைகள் இருந்தாலும் வேதாகமத்தின் அனைத்து புத்தகங்களும் ஒரு நபரை பற்றியும், அந்த ஒரு நபர் இந்த உலகத்துக்கு சொல்லும் ஒரு செய்தியையும் மையப்படுத்தியே பேசுகின்றன. ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத நிலையில் புத்தகங்கள் எழுதப்பட்டிருந்தாலும் அவைகளுக்கு இடயே உள்ள ஒற்றுமை ஆச்சரியப்படத் தக்கது.

இந்த புத்தகத்தில் உள்ள பாடங்கள் அனைத்தும் வேதாகமத்தின் கால வரிசை கிரமத்தை பின்பற்றி அமைக்கபட்டுள்ளது. வேதமத்தில் கடவுள் தம்மை படிப்படியாக வெளிப்படுத்தினார். அவர் ஒரே நேரத்தில் தம்மை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. முதல் மனிதனாகிய ஆதாமைவிட பின்னர் கடவுள் அழைத்த ஆபிரகாமுக்கு அவர் தன்னைக் குறித்து அதிகமாக வெளிப்படுத்தியிருந்தார்.  ஆபிரகாமைவிட மோசேக்கு தன்னைக் குறித்து அதிகமாக வெளிப்படுத்தியிருந்தார். இப்படி படிப்படியாக வெளிப்படுத்தி இயேசு கிறிஸ்துவில் கடவுள் முழுமையாக வெளிப்பட்டார். மட்டுமன்றி பாவம், பரிசுத்தம் போன்ற பல கருத்தாக்கங்கள் துவக்கத்தில் ஒரு புள்ளியில் ஆரம்பித்து பின்னால் விரிவடைகின்றன. எனவே நாம் வேதாகமத்தை முழுமையாகவும் சரியாகவும் புரிந்துகொள்ள அதன் வரிசை கிரமத்தை பின்பற்ற வேண்டும். (லூக். 24:13-27; அப். 7:1-53; சங். 78).

வேதாகமத்தின் அடிப்படை சாராம்சத்தை புரிந்துகொள்ள விரும்புகிற எவரும் இந்த புத்தகத்தை வாசிக்கலாம்.

துவக்கத்தில் கடவுள்>>

Leave a Reply