வேதத்தை விளக்க ஒரு வரைமுறை இருக்கிறதா?

வேதத்தை விளக்க ஒரு வரைமுறை இருக்கிறதா?

நண்பர் ஒருவர் தாவீது கோலியாத்தை கொல்ல எடுத்த ஐந்து குழாங்கல்லை குறித்து கீழ்கண்டவாறு விளக்கம் அளித்தார். 


முதல் கல் சாதாரண கல் – நாம் சாதாரணமானவர்கள்
இரண்டாம் கல்- குழாங்கல் சாதாரணகல் பல்வேறு மாற்றங்களுக்கு பிறகே அது குழாங்கல் ஆகிறது. நாமும் பல்வேறு சோதனைக்கு பிறகே விசுவாசியாகிறோம்.
மூன்றாம் கல்- தெரிந்து கொள்ளப்பட்ட கல், நாம் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்
நான்காம் கல்- அடைப்பையில் போடப்பட்ட கல் (அடைப்பை என்பது சபையை குறிக்கும். நாம் சபையில் இணைக்கப்பட்டவர்கள்).
ஐந்தாம் கல்- கடவுளால் பயன்படுத்தப்படும் கல் ( சபையில் இருப்பவர்கள் எல்லாம் பரலோகம் போக முடியாது. கடவுளால் பயன்படுத்தப்பட்டவர்கள்தான் பரலோகம் போக முடியும்)
இவ்வித விளக்கம் மிகவும் தவறானது ஆபத்தானது என்பது என் கருத்து.

முதலாவதாக வேதம் நம்முடைய புத்தகம் அல்ல, நாம் அதன் ஆசிரியர் அல்ல, பரிசுத்த ஆவியானவரே அதன் ஆசிரியர். அவர்தான் தன்னுடைய புத்தகத்திற்கு நமக்கு விளக்கம் கொடுக்க வேண்டுமே ஒழிய, நாம் நம்முடைய கருத்துக்களை வேதத்தில் திணிக்கக்கூடாது. மேலே சொல்லப்பட்ட விளக்கம் நண்பர் தன்னுடைய விளக்கத்தை வேதத்தில் திணிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
இவர் ஐந்து கல்லுக்கு ஐந்து பிரிவு மக்களை குறிப்பதாக விளக்கம் தருகிறார். ஆண்டவராகிய இயேசு நான்கு பிரிவு நிலத்தை குறித்து உவமையில் நான்கு விதமான நிலங்களை நான்கு பிரிவு மக்களை குறிப்பதாக அந்த உவமைக்கு ஆண்டவரே விளக்கம் தந்திருக்கிறார் (மத்தேயு 13, 18-23). இந்த பகுதி ஆண்டவராகிய இயேசு தன் பிரசங்கத்தில் மக்கள் எளிமையாக விளங்கி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு உவமைகளை பயன்படுத்தினார்.

ஆனால் தாவீதின் சம்பவம் ஒரு வரலாற்று சம்பவம். அது பிரசங்கம் அல்ல, உவமையும் அல்ல. இந்த பகுதியின் சூழ்நிலை என்ன, கோலியாத் தினம் தினம் வந்து கர்த்தரை இழிவுபடுத்தி பேசுகிறான். சவுல் ராஜாவும் இஸ்ரவேல் ஜனங்களும் அவனை கண்டமாத்திரத்தில் மிரண்டு ஒடுகிறார்கள் இப்படியே நாற்பது நாட்கள் நடக்கிறது (1 சாமுவேல் 17-16). சவுலும் இஸ்ரவேல் மக்களும் கோலியத்தின் உயரத்தையும், அவன் அணிந்திருந்த போர் ஆயுதங்களைதான் பார்த்தார்கள். (1 சாமுவேல் 17, 5-7)

ஆனால் தாவீது பாளையத்திற்கு வந்தவுடனே கோலியாத் கர்த்தரை இழிவு படுத்தி பேசுகிறதை கண்டு, உடனடியாக கோலியாத்துடன் பேரிட முன்வந்தான். தாவீது கோலியாத்துடன் போருக்கு செல்ல துணிந்த போது சவுலும், அவனோடிருந்தவர்களும், தாவீதுக்கு சவுலின் ஆயுதங்களையும், கவசங்களையும் அணிவிக்கிறார்கள் (1சாமு 17- 39). ஆனால் தாவீது அதையெல்லாம் அணிந்து பார்த்துவிட்டு இவையெல்லாம் எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு, தன் வழக்கத்தின்படியே கவணையும், கல்லையும் கொண்டுபோனான். 

சவுலும் அவனோடிருந்தவர்களும் பெரிய கோலியாத்தை வெற்றி பெற பெரிய ஆயுதங்களும், கவசங்களும் வேண்டும் என்று கருதினார்கள். காரணம் அவர்களின் விசுவாசம் கவசத்திலும், ஆயுதங்களிலுதான் இருந்தது. ஆனால் தாவீதுக்கு கோலியாத்தோ, அல்லது அவனுடைய ஆயுதமோ பெரிதாக தெரியவில்லை, காரணம் அவனோடிருந்த கர்த்தர் கோலியாத்தை விட பெரியவர் என்று விசுவாசித்தான். ஆகவே பெரிய கோலியாத்தை வெல்ல இந்த சிறிய குழாங்கல் போதும் என்று விசுவாசித்தான்.

ஆகவே இந்த குழாங்கற்கள் ஐந்து பிரிவு மக்களை குறித்தோ அல்லது தெரிந்து கொள்ளப்பட்டவர்களை குறித்தோ, அல்லது சபையை குறித்தோ பேசவில்லை. ஒருவர் ஐந்து குழாங்கல்லுக்கு ஐந்து பிரிவு மக்களை குறிக்கிறது என்று விளக்கம் அளித்தால், மற்றொருவர் ஐந்து குழாகல்லுகள் ஐந்து புலன்களை குறித்து பேசுகிறது என்பார். மற்றொருவர் ஐந்து கண்டங்களை குறிக்கிறது என்பார். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கம் அளித்து கடவுளை கேலிக்கூத்தாக்கக்கூடாது. 

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் என்ற வசனம் கடவுள் மேய்ப்பராகவும், நாம் அவருடைய ஆடுகளாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உருவகத்தை விளக்க வேண்டுமானால் ஒரு மேய்ப்பனுக்கும் ஆடுகளுக்கும் இடையே உள்ள நெருங்கிய உறவு போன்றதுதான், விசுவாசிக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள உறவு என்பது தான் மைய கருத்து. ஒரு படத்தை போலத்தான் இதை தூர நின்று பார்க்க வேண்டும், அப்போதுதான் முழு படமும் தெரியும். மிக நெருங்கி பூதக்கண்ணாடியைக் கொண்டு இதை பார்க்கக்கூடாது. அப்படி பார்த்தால் முழு படமும் தெரியாது.
அதாவது விசுவாசிகளை ஆடுகளுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. ஆகவே ஆட்டின் கொம்பு விசுவாசியின் பெலத்தை குறிக்கிறது, ஆட்டின் வால் விசுவாசிகளின் பாவத்தை குறிக்கிறது. காதுகள் விசுவாசிகளின் இச்சையை குறிக்கிறது என்று விளக்கம் அளிக்கக்கூடாது. ஆடுகளுக்கும் மேய்ப்பனுக்கும் இடையே உள்ள உறவுதான் இந்த உருவகத்தின் முக்கிய கருத்தாகும். ஆட்டின் கொம்பு, வால், காது என்பதெல்லாம் அவசியமற்றதாகும்.

இதை விட கொடுமை என்னவென்றால் இப்படி தவறாக விளக்கம் கொடுக்கிறவர்கள் கர்த்தர் தான் தனக்கு வெளிப்படுத்தினார் என்று சொல்வது கர்த்தரை இழிவு படுத்துவதாகும்.

வேதம் என்ன போதிக்கிறதோ அதை தான் நாம் போதிக்க வேண்டுமே ஒழிய நாம் நம்முடைய கருத்துக்களை வேதத்தில் திணிக்கக்கூடாது. 
வேதம் பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு மனித ஆசிரியர்களை கொண்டு பரிசுத்த ஆவியானவர் எழுதி கொடுத்திருக்கிறார். எழுதிய முறைகளில் வித்தியாசம் உண்டு. சரித்திரம், கவிதை, நீதிபோதனை, தீர்க்கதரிசனம், சரித்திர பின்னணியை கொண்டு, எழுதப்பட்ட முறையை கொண்டுதான் விளக்கம் அளிக்க வேண்டுமே ஒழிய நாம் நம்முடைய விளக்கத்தை கொடுக்கக்கூடாது. அது உண்மையான கர்த்தருடைய வார்த்தையாக இருக்காது. 

Leave a Reply