இதென்னடா தலைப்பு கிறுக்குத்தனமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? இது, தான் யார் என்று அடையாளம் புரியாமல் குழம்பிக்கொண்டிருக்கும் ஒரு கிறிஸ்தவனைப் பற்றியது. தொடர்ந்து பொறுமையாக வாசித்து தியானித்தால் புரியக்கூடும்.
சபைகளில் நிலவிவந்த குழப்பங்களைப் போக்க பல கடிதங்களை அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியவையே இன்று புதிய ஏற்பாடு முழுவதும் நிரம்பி இருக்கின்றன. அதில் வெவ்வேறு சபைகளுக்குத் தனித்தனியாக நாம் யார் என்பதை உச்சியில் அடித்தார்ப்போல் தெளிவாகப் பவுல் எழுதுகிறார். பெரும் மக்கள்கூட்டமான ரோமர்கள், கிரேக்கர்கள் மற்றும் யூதர்களுக்கு இடையே நிலவிவந்த குழப்பங்களைப் போக்க சிலவற்றை அழுத்தமாக அவர் எழுதவேண்டியதாயிற்று. இக்கடிதங்கள் எல்லாம் அவர்கள் அனைவருமே இனப்பெருமை, குலப்பெருமை கொண்டு பிரிவினைகளில் சிக்கித்தவித்தபோது எழுதியவை. இந்த மூன்று வசனங்களையும் நிதானமாக வாசியுங்கள்:
1. யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். ரோமர் 10:12.
2. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். கலாத்தியர் 3:28 . இது
3. அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார். கொலோசெயர் 3:11
ரோமர்களுக்கு தாங்கள் நாட்டை ஆள்பவர்கள் என்ற அதிகார எண்ணமும், கிரேக்கருக்கு தாங்கள் மகா ஞானிகள் என்ற உயர்வும். யூதர்களுக்கு தாங்களே மேசியாவின் பிள்ளைகள் என்ற உணர்வும் மேலோங்கி நின்றன. அவ்வுணர்வுகளில் ஆட்கொள்ளப்பட்டு அவர்கள் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஓவ்வொருவரும் பெருமைவயப்பட்டிருந்தார்கள். இதனால் என்ன நடந்தது?
கிறிஸ்து தம்மைத் தொழுதுகொள்ளுகிற “யாவருக்கும்” ஐசுவரியசம்பன்னரும், நாமெல்லோரும் அவருக்குள் ஒன்றாயிருக்கிறோம் என்ற ஆசிர்வாதமும், கிறிஸ்துவே எல்லாருக்கும் எல்லாமுமாயிருக்கிறார் என்ற சத்தியமும் நுழைய இயலாமல் இன உணர்வுகள் பெரும் தடையாக கதவை அடைத்து நின்று கொண்டிருந்தன. இதைக்கண்ட பவுல் தனித்தனியாகச் சுட்டிகாட்டி, நாம் கிறிஸ்துவுக்குள் அனைவரும் ஒன்றாயிருக்கிறோம் என்று தெளிவுபடுத்தத் தனிதனியாக பல கடிதங்கள் எழுத வேண்டியிற்று.
இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால்புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின (II கொரிந்தியர் 5:17) என்று கொரிந்து சபைக்கும்கூட அழுத்தமாக எழுதி அவர் உணர்வூட்ட வேண்டியதாயிருந்தது.
அப்படியானால் இன்று நாம் யார்?
மேல் குறிப்பிட்ட வசனங்கள் யாவும் யூதருக்கும் கிரெக்கருக்குமானது மட்டுமல்ல. புறஜாதியார் அனைவருக்குமே பொருந்தும். அதாவது பிறப்பால் ஒரு இனத்தைச் சார்ந்திருந்தாலும், மறுபிறப்பால் கிறிஸ்த்துவுக்குள் புது சிருஷ்டியாக இருக்கிறோம், புதிய அடையாளங்களைப் பெற்றுவிட்டோம் என்ற எண்ணம் கொண்ட கிறிஸ்தவருக்கும் மேற்கூறிய வசனங்கள் சொந்தம்.
எனவே நாம் யார்? – அதாவது நம்மை நாம் என்னவாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்? என்ற கேள்வியை கிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவனும் தன்னைநோக்கிக் கேட்டுக் கொள்ளவேண்டிய அவசியம் இந்தக் காலகட்டத்தில் வெளிப்படையாக வந்திருக்கிறது.
நாம் ஆண் (அல்லது பெண்), தமிழர், க்மூகெபூரச் சாதிக்காரன், இந்தியர் என்று உலக அடையாளங்களுடந்தான் பிறந்தோம். அதில் மாறுபாடு இல்லை. ஆனால் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டி என்பவன் ஒரு பழைய அடையாளங்களுக்குச் செத்தவன். இனி மீசையை முறுக்கிக் கொண்டு நான் அவன், இவன் என்று சொல்வது வேதத்தின் அடிப்படையில் சரியா என்று நம்மை நாமே நிதானித்துப் பார்ப்பது அவசியம். இது ஒருவேளை உங்களுக்கு அதிர்ச்சியாகவோ, எரிச்சலாகவோ இருக்கக் கூடும். ஆனால் வேறு வழியில்லை!
அப்படியானால் தாம் தமிழர் இல்லையா? இந்தியர் இல்லையா? என்றால் – அதைவிட மேலானவர்கள் என்றுதான் வேதம் சொல்கிறது. அதாவது, நாம் “பிரோமோஷன் வாங்கியாயிற்று”. ! MA படித்தவர் +2 என்று தன் பெயருக்குப் பின் போடுவதில்லை. 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தபின் யாரும் ஐந்தாம் வகுப்புப் பரிட்சையில் கோட்டைவிட்டிருக்கப் போவதில்லை. மேல்படிப்பின் ஞானமும் அதன் செயல்பாடுகளும் வேறாக இருக்கும். அதிகரித்துக் கொண்டே இருக்கும். அதுபோல் ஒரு கிறிஸ்தவன், தன்னைக் கிறிஸ்துவின் சீடன், அவரது பல்கலையில் படித்துத் தேறிக் கொண்டிருப்பவன் என்றுதான் அடையாளப்படுத்த முடியும். அவன் இன உணர்வுகளைக் கடந்து மேலான நிலையை அடைந்துவிட்டவன். இந்த அடையாளம் மிக உன்னதமானது. இதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
இது புரியாமல், இன்னும் பழையது நமக்குள் சாகாமலிருந்தால், நாம் இன்னும் கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கத்தினரே இல்லை. அவரது கட்டுப்பாட்டிலும் இல்லை!. மாறாக எந்த ஒரு அடையாளத்தையும் உருப்படியாகத் தரிக்காமல் – புரியாமல் – தத்தளித்துக் கொண்டு வெறும் உணர்ச்சிப் பூர்வமானவர்களாக, நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு, குழப்பவாதிகளாக அலைபவர்களாக பெருமையடித்துக் கொண்டுதான் இருப்போம். பழைய வீரத்தழும்புகளோடு கிறிஸ்துவின் தழும்பையும் இணைத்துக் கொள்ள நினைக்கிறீர்களோ? அப்படியானால் விபரீதம்தான் உங்களால்!
எனக்குள் இருப்பது பென்னியின் சிந்தையென்றால் பென்னியின் உணர்ச்சி இருக்கவேண்டும். கிறிஸ்துவின் சிந்தையென்றால் கிறிஸ்துவின் உணர்ச்சி இருக்கவேண்டும். தச்சனாகப் பிறந்த யூத கிறிஸ்துவோ இன்று யூதனல்ல! தச்சனுமல்ல! அவர் தேவாதிதேவன், கர்த்தாதிக் கர்த்தா! மறுரூபமாகி இன்று தேவ குமாரனாக அமர்ந்திருக்கிறார். அவரது அச்சடையாளங்களைத் தரித்தபின் வேறு அடையாளம் நமக்கிருப்பதில்லை. ஒரு உறையில் அரசாங்க முத்திரை அரக்கு வைத்துக் குத்தப்பட்டிருந்தால் அது அரசுக்குச் சொந்தம்; அதனுடன் அதன் மேல் அல்லது அருகில் வேறு ஒரு முத்திரையைத் தரித்தால், அந்த உறையே செல்லாததாக, போலியாக மாறிவிடும் அபாயம் உண்டு!
பழையமனிதன் செத்து, கிறிஸ்துவின் சிந்தையைத் தரித்து புது சிருஷ்டியாக வாழ்பவனின் செயல்பாடுகள் மிகப்புதிதாகப், உன்னதமாக இருக்கும். வெறும் உணர்வுப் பூர்வமாக இல்லாமல் கிறிஸ்துவின் ஞானத்தோடு இருக்கும். அவன் போராடும் போராட்டம் நல்ல போராட்டமாக இருக்கும். அவன் ஜீவன் நித்திய ஜீவனாக இருக்கும்.
மேல்பட்டம் வாங்கியாயிற்று, இனி நம் செயல்பாடுகள் எல்லாம் அதற்கேற்போல்தான் இருந்தாக வேண்டும். மறுபடி பத்தாம் வகுப்புப் பரீட்சை எழுத நினைப்பது வருத்தம் தரும் நிலை! மேலே தலைப்பைப்போல அடையாளம் தெரியாத வாழ்க்கையே கிறிஸ்தவனுக்கும் என்றாகிவிடும்.
