நம்பிக்கையின் பலன் நீதி
கடவுள் ஒரு மனிதனை தெரிந்துகொண்டார். பாபேல் சம்பவதிற்க்கு பிறகு, மக்கள் வெகு சீக்கிரமே உண்மையான கடவுளை மறந்தனர். மனிதரால் உருவாக்கப்பட்ட சிலைகளை தெய்வங்களாக வழிபட ஆரம்பித்தனர். ஆபிராம் எனும் மனிதனின் குடும்பமும் அதற்கு விதிவிலக்கல்ல. கடவுள் தன் கிருபையினால் ஆபிராமுக்கு தன்னை வெளிப்படுத்த சித்தமாகி, அவர் மூலம் தமது திட்டத்தை செயல்படுத்த சித்தம் கொண்டிருந்தார்.
கடவுளின் வாக்குறுதியும் ஆபிரகாமின் நம்பிக்கையும்
ஆபிராம் மற்றும் அவரது உறவினர்கள் ஊர் என்ற பகுதியில் வசித்து வந்தனர். மிகுந்த செல்வந்தர்களாக வாழ்ந்துவந்த அவர்கள் சிலை வழிபாடு செய்பவர்களாகவும் இருந்தனர். ஆபிராமும் அவரது குடும்பமும் தமது சுற்றத்தாரை போல மனிதர்களால் உண்டாக்கப்பட்ட சிலைகளை தெய்வங்கள் என்பதாக வணங்கிவந்தார்கள். ஆபிராமும் அவர் மனைவி சாராவும் வயதானவர்கள். அவர்களுக்கு பிள்ளை இல்லை. இந்த சூழலில் உண்மையான கடவுள் தன்னை ஆபிராமுக்கு தெரியப்படுத்தினார். கடவுள் ஆபிராமை நோக்கி சிலையை தெய்வமாக வணங்குவதை விட்டுவிட்டு தன்னை நம்பும் படியாகவும், அவருடைய நாடு, உறவினர்கள் மற்றும் பெற்றோரிடம் இருந்து பிரிந்து தான் கொடுக்கப்போகும் நாட்டிற்கு வரும்படியாகவும் அழைத்தார். மட்டுமன்றி கடவுள் ஆபிராமுக்கு ஒரு சந்ததியை கொடுப்பதாகவும், ஆபிராமின் வழித்தோன்றல்கள் பெரிய இனக்கூட்டமாக உருவாகுவார்கள் என்றும், ஆபிராமுக்குள் உலகின் அனைத்து இன மக்களும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் எனவும் வாக்களித்தார்.
கடவுள் கூறிய அனைத்தும் நிறைவேறுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை என்கிற சூழ் நிலை இருந்தாலும் கடவுள் கூறினார் என்கிற ஒற்றைக் காரணம் ஆபிராமுக்கு போதுமானதாக இருந்தது. “ஆபிராம் கடவுளை நம்பினான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.” (ஆதி. 15:6; ரோமர் 4:3, ரோமர் 4:9; கலா. 3:6; யாக். 2:23). கடவுள் கூறினதை அவர் செய்துமுடிப்பார் என்பதை ஆபிராம் நம்பினபடியால் தான் செய்யுமாறு பணித்ததை ஆபிராம் செய்தார். தன் குடும்பத்தோடு கடவுளை நம்பி பயணத்தை துவங்கினார்.
நாட்கள் கடந்தன. ஆபிராம் தன் மனைவியோடும், தன் பணியாட்களோடும், தன் சொத்துகளாகிய கால் நடைகளோடும் வனாந்தரங்களில் அலைந்து திரிந்தார். தனக்கு கடவுள் கொடுப்பதாக கூறின நிலப்பகுதிகளில் தங்கினார். தேவைப்படும் நேரத்தில் பிரித்து கட்டிக்கொண்டு பிரயாணப்பட வசதியாக தோலினால் ஆன கூடாரம் அமைத்து வாழ்ந்தார். வருடங்கள் பல கடந்தது. ஆபிராமுக்கும் அவர் மனைவி சாராய்க்கும் கடவுளின் வாக்குறிதியின் மேல் சந்தேகம் வந்தது. எனவே சாராயின் பணிப்பெண்ணான ஆகார் மூலம் ஆபிராமுக்கு ஒரு சந்ததியை உண்டுபண்ண வேண்டும் என்கிற சாராயின் யோசனையை ஆபிராம் ஏற்றுக்கொண்டார். அதின் விளைவாக ஆபிராமுக்கும் ஆகாருக்கும் இஸ்மவேல் எனும் ஆண்குழந்தை பிறந்து வளர்ந்தான். இஸ்மவேல் பிறந்தபோது ஆபிராமுக்கு வயது 86.
ஒரு குறிப்பிட்ட சூழலில் கடவுள் மறுபடியும் ஆபிராமை சந்தித்து, தான் ஏற்கனவே கூறின வாக்குறுதியை உறுதிப்படுத்தினார். ஆபிராமுக்கும் சாராய்க்கும் பிறக்கும் ஆண் வாரிசு மூலமாகவே தான் கூறிய வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறும் என கூறினார். ஆபிராமோ அவர் மனைவியாகிய சாராயோ தாங்கள் மிகவும் வயது முதியவர்கள் ஆகிவிட்டபடியினாலே கடவுளை நம்பாமல் அவர் கூறினதை எண்ணி மனதிற்க்குள் நகைத்தனர். அதை அறிந்த கடவுள் அவர்களை கடிந்துகொண்டு தான் கூறியதை கண்டிப்பாகவே நிறைவேற்றுவேன் என கூறி அதற்கு அடையாளமாக ஆபிராம் எனும் பெயரை ஆபிராகாம் எனவும், சாராய் எனும் பெயரை சாராள் எனவும் மாற்றினார். மனித எண்ணத்தில் சாத்தியமே இல்லாத சூழலிலும் அந்த தம்பதியினர் கடவுள் தான் சொன்னதை நிறைவேற்ற வல்லமை உள்ளவர் என்பதை மீண்டும் நம்பினர்.
ஆபிரகாமுக்கு கிட்டத்தட்ட 100 வயதும் சாராளுக்கு 90 வயதும் ஆன சூழலில் கடவுள் சொன்னபடியே சாராள் கர்பம் தரித்தார். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டனர். ஆம், கடவுளின் வார்த்தையை நம்பி அதின் அடிப்படையில் வாழ்வதே இறைமக்களின் வழி.
“(கடவுளின் வார்த்தையின் மேல் வைக்கும்) நம்பிக்கையினால் நீதிமான் பிழைப்பான்.” (ஆப. 2:4; ரோமர் 1:17; கலா. 3:11; எபி. 10:38). [அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது]. இதுவே நம்பிக்கையின் பலன் நீதி.
வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ள தேவன்
ஆபிரகாமுக்கு கடவுள் வக்களித்தபடியே ஈசாக்கு எனும் மகனை கொடுத்தார். பின்னர் ஈசாக்கின் மகனாகிய யாக்கோபு (எ) இஸ்ரவேலை தம்முடைய சித்தத்தை செய்ய தெரிந்தெடுத்திருந்தார். இஸ்ரவேலுக்கு பன்னிரண்டு மகன்கள் பிறந்தனர். அவர்களில் ஒருவரான யோசேப்பு எகிப்துக்கு அடிமையாக கொண்டுபோகப்பட்டார். ஆனால் கர்த்தரின் கரம் யோசேப்போடே இருந்தது. அந்த யோசேப்பின் மூலம் எகிப்து மாபெரும் பஞ்சத்தில் இருந்து தப்பித்தது. யோசேப்பு எகிப்தின் அரசனுக்கு அடுத்த பதவி வரைக்கும் உயர்த்தப்பட்டார்.
இஸ்ரவேல் மற்றும் அவருடைய குடும்பமாக மிகவும் வறட்சியான சூழலில் யோசேப்பின் மூலம் 70 பேர் எகிப்திற்குச் சென்றனர். இவர்களுடைய வழிமரபினரே இஸ்ரவேலர்கள் என அழைக்கப்பட்டனர். இஸ்ரவேலர்களின் முற்பிதாக்கள் மரணத்திற்கு பின், இஸ்ரவேலர்கள் எகிப்தில் மிகவும் பலுகிப் பெருகினார்கள். இஸ்ரவேலர்களுக்கும் எகிப்துக்கும் என்ன தொடர்பு என்றே தெரியாத ஒரு அரசன் வந்தான். எகிப்தியர்கள் இஸ்ரவேலர்களை அடிமைகள் ஆக்கி மிகவும் சிறுமைப்படுத்தினார்கள். கிட்டத்தட்ட 400 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், ஏற்கனவே 80 வருடங்கள் மோசேயை தயார்படுத்தியிருந்த கடவுள், இஸ்ரவேலர்களோடு தொடர்பு கொள்ள ஆரம்பித்தார்.
கடவுள் தான் செய்வதாக சொன்ன எதையும் நிறைவேற்றுகிறார். மனிதர்களாகிய நமக்கு கடவுள் தாமதிப்பதாக தோன்றினாலும் கடவுள் எதையும் தாமதிப்பதில்லை. இவ்வுலகில் எந்த சக்தியும் கடவுள் செய்ய நினைப்பதை தாமதப்படுத்துவதோ தடுப்பதோ இல்லை. கடவுள் அந்தந்த நேரத்தில் எல்லவற்றையும் நேர்த்தியாக செய்கிறவர்.
கடவுள் தெரிந்தெடுத்த நபர்களின் இயலாமைகள்
ஆபிரகாம் – நம்பிக்கையில் தளர்ச்சி: ஆபிரகாம் ஒரு பொய் பேசுபவர். ஒரு குறிப்பிட்ட சூழலில் தனது உயிருக்கு ஆபத்து எற்படும் நிலையில் தான் பொய் சொன்னதோடு தனது மனைவியையும் பொய் சொல்லும்படி நிர்பந்த்தித்தார். சாராளின் யோசனையான பணிப்பெண் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் யோசனையை ஏற்றுக்கொண்டார். ஈசாக்கு: ஈசாக்கும் பொய் பேசுபவரே. அவர் பட்சபாதம் பார்க்கிறவராகவும் இருந்தார். யாக்கோபு: யாக்கோபு என்ற பெயருக்கே எத்தன் என்றுதான் பொருள். பிறரை ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர் இந்த யாக்கோபு. மோசே ஒரு முற்கோபி, கொலைகாரர், நினைத்ததை சாதிக்க துடிப்பவர்.
கடவுள் தெரிந்துகொண்ட மக்களாக இருந்தாலும் மனிதருக்கே உரிய பாவ சுபாவத்தின் தன்மைகள் அவர்களிடம் வெளிப்பட்டது. எனினும் வேதாகமத்தை தொடர்ந்து வாசிக்கும்போது ஒரு உண்மை புலப்படும். கடவுள் தான் தெரிந்தெடுத்த நபர்களை பக்குவப்படுத்தினார். அவர்கள் கடவுளை அறிய அறிய அவர்கள் வாழ்க்கை பக்குவப்பட்டது. கடவுள் தான் என்ன செய்வதாக சொல்லியிருந்தாரோ அதை நிறைவேற்றிக்கொண்டே இருந்தார். நாம் புரிந்து கொள்ளவேண்டிய உண்மை, மனிதருடைய இயலாமைகளுக்கு மத்தியிலும் தேவசித்தம் நிலை நிற்கும்.
விசுவாசிகளின் விசுவாச வெளிப்பாடுகள்
ஒருபுறம் கடவுள் தெரிந்தெடுத்த நபர்களின் இயலாமைகள் வெளிப்பட்டாலும் அவர்கள் எல்லோருக்கும் இடையில் ஒரு ஒற்றுமை உண்டு – எல்லோரும் கடவுளின் வார்த்தையை (ஆபிரகாமுக்கும் அவரது பின்வரும் சந்ததிக்கும் கடவுள் கொடுத்த வாக்குறுதியை) நம்பியவர்கள்.
தான் கொடுத்த வாக்குத்தத்தத்தை ஆபிரகாம் உண்மையிலேயே நம்புகிறாரா என சோதிக்கும் வண்ணம் ஈசாக்கை தனக்கு பலியாக கொடுக்க வேண்டும் என கடவுள் ஆபிரகாமிடம் சொன்னார். ஆபிரகாம் ஈசக்கை பலியிட துணிந்தார். ஈசாக்கு மரித்தாலும், மரணத்திலிருந்து அவனை உயிரோடு எழுப்பி கடவுள் தான் செய்வதாக கூறியிருந்ததை நிறைவேற்ற வல்லவர் என்பதை நம்பினார்.
ஈசாக்கு கடவுளை நம்பினதினால் தன் தகப்பன் தன்னை பலியிட முயன்ற போது தப்பிக்க முயற்சிக்கவில்லை. கடவுள் கண்டிப்பாக இஸ்ரவேல் மக்களை எகிப்தில் இருந்து தான் வாக்களித்திருந்த நாட்டிற்க்கு அழைத்துச்செல்லுவார் என்கிற நம்பிகையினால். யாக்கோபு தன் மரணத்திற்கு பிறகு கானான் நாட்டில் இருக்கும் அவர்களது நிலப்பகுதியில் அடக்கம் பண்ண சொன்னார்.
யோசேப்பு கடவுளை நம்பினதினால் தன் வாழ்வின் கடினமான சூழல்களில் முறுமுறுக்கவில்லை.வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு கடவுள் அழைத்துப் போகும்போது எகிப்திலிருந்து தன் எலும்புகளை மறக்காமல் கொண்டுபோகச்சொன்னார்.
மோசேயின் பெற்றோர் கடவுளை நம்பினதினால் மோசே அழகுள்ள பிள்ளை என்று கண்டு (கடவுள் எதை கொடுத்தாலும் அதன் பின்னணியில் அவருக்கு ஒரு நோக்கம் இருக்கும்) மூன்று மாதம் ஒளித்து வைத்தார்கள். மோசே கடவுளை நம்பினதினால் எகிப்திய அரண்மனையில் இளவரசனாக வாழ கிடைத்த செழிப்பான வாழ்வை துறந்து இஸ்ரவேலர்களோடு பாடு அனுபவிப்பதை தெரிந்தெடுத்தார்.
முடிவுகள்
கடவுளின் மக்கள், நம்பிக்கையின் மக்கள். நம்பிக்கையின் பலன் நீதி. கடவுளின் வார்த்தையே அவர்கள் நம்பிக்கைக்கும் வாழ்கைக்கும் அடிப்படை. ஏனெனில் கடவுள் வார்த்தை தவறாதவர். தான் கொடுத்த வாக்குறுதியிலிருந்து பிறழாதவர். உண்மையான இறை நம்பிக்கை நம்முடைய பெலவீனங்களுக்கு மத்தியிலும் செயல்படும். மனிதரின் பெலவீனங்கள் ஒரு போதும் கடவுளின் திட்டத்தை தடைசெய்தது இல்லை.
