நான் பைபிள் தவிர மற்ற புத்தகங்களைத் தொடுவதில்லை என்று வேதாகமம் மட்டுமே வாசிப்பவர் ஆனாலும், ஆங்கில வேதாகமம் ஒன்றாவது உங்களிடம் இருக்கவேண்டும். நான் சொல்வது அலமாரிகளில் 1960ல் இருந்து உறங்கிக் கொண்டிருக்கும் பழைய நம் தாத்தா கையெழுத்து காணப்படும் பழைய சிறு KJV வேதாமம் அல்ல. அது பத்திரமாக இருக்கட்டும். ஏனென்றால் ஆங்கிலத்தில் வாசித்துப் பழகாதவர்களுக்கான தொடக்கநாட்களுக்கான வேதாகமம் அது அல்ல. அதை வாசித்தால் பின்பு ஆங்கில வேதவாசிப்பே கசக்கக் கூடும்.
நான் சொல்வது KJV (King James Version)ன் எளிமைப்படுத்தப்பட்ட பதிப்பான NKJV (New KJV)அல்லது இன்னும் எளிய ஆங்கிலத்தில் இருக்கும் ESV (English Standard Version) அல்லத NASB எனப்படும் New American Standard Bible. நினைவில் கொள்ளுங்கள் NAB அல்ல NASB. NIV பதிப்பைப்பற்றிய பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் இருப்பதால் அதை நான் தவிர்க்கிறேன். Good news bible போன்றவற்றை பிள்ளைகளுக்குக் கூட நான் பரிந்துரைக்க மாட்டேன்). தமிழில் இருக்கும் சொல்லொவியம், தானியேல் வேதாகம் என்பவைகள் எல்லாம் என்னைப் பொறுத்தவரை study bible-களே அல்ல. சில முன்னுரைகள், சொந்தக் கருத்துக்களை உள்ளடக்கியவை. எனவே உங்கள் ஆங்கிய வேதாகமம் ஒரு study பைபிளாக இருப்பது சிறந்தது.
வேதாகமம் கற்க வேண்டிய ஒன்று. வெறுமனே வாசித்துச் செல்லவேண்டிய கதை புத்தகம் அல்ல என்பதை நாமறிவோம். எனவே, ஏதாவது ஒரு வேளையில் (காலை அல்லது மாலையில்) தமிழ் வேதமும், மற்ற ஒரு வேளை (இரவும் பகலும் தியாமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் சங்கீதம் 1: 2) ஆங்கில வேதமும் வாசிப்பது மிகுந்த நன்மை கொண்டுவருவது உறுதி. ஆங்கில வேதம் வாசிக்க, குறிப்பாக NKJV மற்றும் NASB வாசிக்க மிக்க ஆங்கிலப்புலமை ஏதும் அவசியமில்லை. பள்ளி வரை கற்ற ஆங்கிலமே போதுமானது. வேண்டுமானால், Oxford English to Tamil அகராதியை உடன் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு 20 நாள் தடைதான் அது; அப்புறம் எளிதாகிவிடும். அகராதிகூடத் தேவைப்படாது. ஜெபித்துவிட்டுத் துவங்கினால், ஆவியானவரின் துணையோடு ஆங்கிலமும் எளிதாகும். வாசிப்பில் குதூகலத்தைக் காண்பீர்கள்.
நான் அதிகம் உபயோகிப்பது NASB. இத்துடன் NASB life application study Bible மற்றும் NKJV living the spirit filled life Bible. அலுவலகத்தில் Charles Stanley life principles Daily Bible, NKJV பதிப்பு. இவற்றைத் தேடித்தான் வாங்க வேண்டும். பெங்களூர், சென்னையில் கிடைக்கக்கூடியவை. இவை அனைத்தும் ரு. 2000-3000 இருக்கும். ஆனால் இது உங்கள் ஆத்துமாவிற்கான முதலீடு. நல்ல தோல் கவருடன் வருவதால் 25 வருடங்களாவது நிலைத்திருக்கும் என்று நம்புகிறேன். (சிலமாதம் இதற்காகப் பணம் சேர்த்துவைத்து அப்படி ஒரு வேதம் வாங்கிக் கைகளில் ஏந்தும்போது கிடைக்கும் உணர்வை அப்போது மட்டும்தான் அனுபவிக்க முடியும்.)
மேற்சொன்ன NASB, NKJV தவிர NRSV, CSB ஆகியவற்றையும் உபயோகிக்கலாம். இதில் ESV மற்ற எல்லா மொழிபெயர்ப்புகளையும் விட அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. AMP என்றொரு பதிப்பு உண்டு, இது ஒன்றுக்கு மேற்பட்ட பொருத்தமான வார்த்தைகளை உள்ளடக்கியது.
ஏன் இவ்வாறு ஆங்கில வேதாகமம் ஒன்றையும் வாசிக்கவேண்டும்? தமிழ் பைபிளை ஒழுங்காக வாசித்தால் போதாதா என்று கேட்பவர்களுக்கு: இதை முயற்சித்துப் பார்த்தால்தான் நான் கூறும் உண்மை புரியும். நாம் வாசிக்கும் தமிழ் பைபிள் மொழிபெயர்ப்பு பலமுறை ஏற்படுத்த இயலாத தாக்கத்தை சில ஆங்கில வார்த்தைகள் உடனடியாக உண்டாக்கும். அதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. ஆனால், அதற்காக ஆங்கில வேதாகங்கள் உயர்ந்தவை என்ற அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. அவற்றுள்ளும் மொழிபெயர்ப்புக் குளறுபடிகள், அதிலும் வேண்டுமென்றே செய்யபட்டவை உண்டு. என்றாலும், பல வேதாகமங்களை உபயோகப்படுத்தும் போது இவற்றைத் தவிர்க்கலாம்.
ஆழமான தியானமும், விளக்கங்களும் இவ்வகை வாசிப்பில்தான் சாத்தியம். மேலும், கிரேக்கம் எபிரேயம் கற்று இன்னும் சிறப்பாக வேத தியானம் செய்வது எல்லோரும் சாத்தியம் அல்ல. அது மட்டுமல்லாமல், இன்னொரு நன்மையும் உண்டு. வேதவாசிப்பை சில நிமிடங்களில் இருந்து மாற்றி மணிக்கணக்கில் அனுபவமாகக் கொண்டு செல்ல இவை உதவும். எனக்கு உதவியிருக்கிறது. வேதம் வாசித்தாலே கொட்டாவி வருகிறதா? Study bibleகள் அந்த உணர்வையே மாற்றும்.
நான் பெரிய “ஆங்கிலப் புலி” அல்ல. தமிழ் மீடியத்தில் படித்தவன். இப்பொழுதும் வேலை ஸ்தலத்தில் மட்டுமே ஆங்கிலம். குடும்பத்தினருடன் கதைப்பது 100% தமிழில்தான். ஆனால், வாரத்தில் சிலமணி நேரங்களாவது ஆங்கில வேதாகமத்தில் கழிகிறது. அது வேதாகமம் வாசிக்கும் அனுபத்தையே மாற்றியிருக்கிறது என்பது நிச்சயம். ஆனால், இப்படியெல்லாம் வாங்கி வாசிக்க நிறைய நேரம் வேண்டுமே, அவ்வளவு நேரம் செலவழித்து வாசிக்க எனக்கு நேரம் இல்லையே என்பவர்களுக்கு ஒரு செய்தி: “நீங்கள் இந்தக் கட்டுரையை வாசித்து உங்கள் 5 நிமிடத்தை வீணடித்து விட்டீர்கள் ஐயா!
